கரூரில் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் பலியாக காரணம் என்ன? வீடியோ ஆதாரங்களுடன் தமிழக அரசு விளக்கம்: கட்டுப்பாடற்ற ரசிகர்களின் அத்துமீறல்கள் அம்பலம்
சென்னை: கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியானதற்கு யார் காரணம்? வழக்கம்போல மேலோட்டமாக குற்றச்சாட்டுக்களை கூறுகிறவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் தமிழக அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேற்று விளக்கம் அளித்தனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, உள்துறை செலயாளர் தீரஜ் குமார், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், டிஜிபி வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் கூட்டாக நேற்று சென்னை தலைமை செயலகத்தில், கரூர் சம்பவம் குறித்து வீடியோ பட காட்சியுடன் விளக்கம் அளித்தனர்.
அதுவருமாறு :
அமுதா: கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டத்தில் ஒரு துயரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் சில தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. நடந்த சம்பவம் குறித்து சில வீடியோக்கள் அரசு சார்பில் வெளியிடுகிறோம்.
* விஜய் நாமக்கல்லில் பேசப்போவதாக சொன்ன நேரம் காலை 8.45 மணி, கரூரில் மதியம் 12 மணிக்கு பேச போவதாக சொல்லப்பட்டது. ஆனால் சென்னையிலிருந்து அவர் புறப்பட்டது காலை 8.45 மணி. ஆனால் 10 மணிக்கு தான் நாமக்கல் வந்தடைகிறார். அவர் பேசப் போகும் இடத்திற்கு வாகனத்தில் வரும் போது தொண்டர்கள் வாகனத்தை பின் தொடர்கின்றனர். அதேபோல் விஜய் வாகனமானது ராங் சைட் பயணித்தது. இதனால் அவர் பிரசாரம் நடைபெறும் இடத்தில் பல மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் நெரிசல் காரணமாக மயக்கம் அடைந்த காட்சிகள் வெளியிடப்பட்டது. அதேபோன்று நாமக்கல் காவல் துறையின் நிபந்தனைகளை மீறி தவெக தொண்டர்கள் ஆங்காங்கே இருந்த கட்டிடங்கள் மீது ஏறியது, விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்தது போன்ற காட்சிகள் வெளியிடப்பட்டது. இதுஎல்லாம் விஜய் தாமதமாக சென்றதற்கு ஆதாரமாகும். பலரும் அங்கிருந்த கடையின் மேற்கூரையை உடைத்து கொண்டு மாடிகளில் ஏறியது போன்ற காட்சிகளும் வெளியிடப்பட்டது.
* விஜய் பேசிக்கொண்டு இருந்தபோது ‘கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது என்று அவரது பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர். அப்போது அவர்களுக்கு பதில் அளித்த விஜய் சின்ன உரைதான் 5 நிமிடத்தில் முடிந்துவிடும் என்றார்.
* நாமக்கல்லில் பேசி முடித்து விட்டு இரவு 7.45 மணிக்கு கரூர் வந்தடைந்தார். அப்போது விஜய், காவல் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர்கள் இல்லை என்றால், பைபாசிலிருந்து இந்த இடத்திற்கு இவ்வளவு சீக்கிரம் வந்து இருக்க முடியாது என்று பேசுகிறார்.
* கரூரில் விஜய் பேச்சு தொடங்கும் போது கூட்டத்தில் இருந்த சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த காவலர்கள் தங்களிடமிருந்த கைகுட்டையை வீசி மயக்கம் தெளிய வைத்தனர். இதில் தொடர்ந்து பலரும், மயங்கி விழுந்தனர்.
* விஜய் கரூரில் பேச வரும்போது தொண்டர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் கூரை மீதும், விளம்பர போர்டுகள் மீது ஏறிய காட்சியும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டது.
* விஜய் பேசிக்கொண்டிருந்தபோது சிலர் அவர் வாகனம் அருகிலேயே மயங்கி விழுந்த காட்சி வெளியிடப்பட்டது. அப்போது விஜய் தண்ணீர் பாட்டிலை கூட்டத்தை நோக்கி வீசினார். இதை தொடர்ந்து, அவரின் பிரசார வாகனத்தில் இருந்தவர்களும் தண்ணீர் பாட்டிலை கூட்டத்தினர் மீது வீசினர். அந்த தண்ணீர் பாட்டிலை எடுக்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
* இந்த நேரத்தில் பிரசார வாகனத்தில் இருந்து வெளிவந்த ஆதவ் அர்ஜூனா, மைக்கில் பேசிக்கொண்டிருந்த விஜயிடம் எதையோ கூறினார். இதை தொடர்ந்து விஜய் தனது பேச்சை விரைவாக முடித்து கொண்டு கீழே இறங்கினார். (கூட்டத்தில் பலரும் மயங்கி விழுந்த தகவலை விஜய்யிடம் தெரிவித்ததால் அவர் தனது பேச்சை விரைவாக முடித்து கொண்டதாக கூறப்படுகிறது)
டேவிட்சன் ஆசீர்வாதம் (சட்டம் ஒழுங்கு டிஜிபி): கடந்த 23.9.2025ம் தேதி காவல் துறையிடம் மனு ஒன்று அளிக்கப்படுகிறது. லைட்அவுஸ் பகுதிக்கு அனுமதி கோரினர். ஆனால் அந்த பகுதி மிகவும் ஆபத்தானது. ஒரு புறம் பெட்ரோல் பங்க், மறுபுறம் அமராவதி ஆற்றின் பாலம் உள்ளது. இதுபோன்று இடங்களில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்ட முடியாது. அதனால் இந்த பகுதியை காவல் துறையினர் ரத்து செய்தனர். 2வது அவர்கள் சொன்ன உழவர் சந்தை பகுதி மிகவும் சிறிய இடம். பின்னர்தான் வேலுச்சாமிபுரம் என்ற இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை 25ம் தேதி தவெக நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா நிருபர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்காக முதலில் கொடுக்கப்பட்ட இடம் வேலுச்சாமிபுரம் தான். காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கேட்ட இடத்திற்கு மாறாக இடம் வழங்கப்பட்டதாக தவெகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர். பொதுவாக கடந்த 27ம் தேதி நிகழ்ச்சி நடத்த வேண்டி, அவர்கள் இடம் தேர்வு செய்ய 7 இடங்கள் முடிவு செய்து கடிதம் வழங்கினர். அதன்படி போலீசாரும், தவெகவினரும் கலந்து ஆலோசித்து தான் இடம் தேர்வு செய்யப்பட்டது. 25ம் தேதி அதே கரூர் வேலுச்சாமிபுரத்தில் வேறு கட்சி (அதிமுக) ஒன்றும் கூட்டம் நடத்தி இருக்காங்க. இங்கு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் எந்த கஷ்டமும் இன்றி கூட்டத்தில் கலந்துகொண்டு சென்றனர்.
அதன்பிறகு தவெகவினர் 26ம் தேதி எங்களுக்கும் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுங்கள் என்று கடிதம் வழங்கினர். முதலில் அவர்கள் கேட்ட இடம், லைட் அவுஸ் ரவுண்டானா. அங்கு, அருகில் பாரத் பெட்ரோலியம் நிலையம் இருந்தது. கூடுதலாக அங்கு கால்வாய் ஒன்று இருந்தது. அமராவதி பாலம் இருந்தது. அங்கு தண்ணீர் இருந்ததால் அங்கு ஏதேனும் நெரிசல் ஏற்பட்டால் அசம்பாவிதம் ஏற்படும் என்ற காரணத்தால் தான் அந்த இடத்தை போலீஸ் தரவில்லை. 2வது இடமாக உழவர் சந்தை கொடுத்து இருந்தார்கள். இது நகராட்சி சாலை. தோராயமாக 30 முதல் 40 அடி அகலம் இருக்கும். பெரிய அளவில் கூட்டத்தை அங்கு சமாளிக்க முடியாது. வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 60 முதல் 70 ஆடி அகலம் இருந்ததால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள், தொண்டர்கள் வந்துவிட்டார்கள். அவர்களுக்கு முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என்று கேள்வி வைத்துள்ளனர். பொதுவாக ஒரு கூட்டத்திற்கு அனுமதி கோரும்போது, இந்த கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று தோராயமாக கணக்கு கொடுப்பார்கள். அதன்படி அவர்கள் கொடுத்த கடிதத்தில் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் நாமக்கல் உள்ளிட்ட முந்தைய கூட்டத்தை பார்த்து தோராயமாக 20 ஆயிரம் பேர் வருவார்கள் என்று உளவுத்துறை கணக்கு கொடுத்தது. அதாவது பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர்கள் தான் பாதுகாப்பு வழங்குவது நடைமுறை.
இதுபோன்ற அதிக கூட்டத்திற்கு 20 நபர்களுக்கு ஒரு காவலர் என்று பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதாவது அவர்கள் கொடுத்த 10 ஆயிரம் கூட்டத்திற்கு ஏற்றப்படி 500 போலீசார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் கூட்டம் 3 மணியில் இருந்து கூடிக்கொண்டே இருந்தது. மாலை 6 மணிக்கு எல்லாம் 20 ஆயிரம் பேர் இருந்தார்கள். கட்சி தலைவர் வரும்போது இன்னும் அதிகளவில் தொண்டர்கள் வந்தனர். அதனால் அந்த இடத்தில் 25 ஆயிரத்திற்கு மேல் கூட்டம் கூடியது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கொடுத்த இடத்திற்கு முன்னால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் விஜய் வாகனம் வருகிறது. அப்போதே இருபுறங்களிலும் கூட்டம் கூடியது.
* தவெகவினர் பரப்புரையின்போது மின்சாரம் நிறுத்தப்பட்டதா என்று கேள்வி வைத்தனர். ‘இதற்கான விளக்கத்தை கரூரில் உள்ள மின்சார வாரிய அதிகாரி விளக்கம் கொடுத்து இருந்தார். மின்சார வாரியம் சார்பில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் போகஸ் விளக்கு அணைகிறது என்றால் தவெக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜெனரேட்டர் பகுதியில், பொதுமக்கள் உள்ளே நுழையும் போது தான் விளக்கு அணைகிறது. மற்ற எல்லா இடங்களிலும் விளக்குகள் எரிகிறது.
* காவல்துறையினர் தடியடி நடத்தினார்களா என்று கேள்விகள் கேட்டுள்ளனர். கட்சி தலைவர் பரப்புரை இடத்திற்கு வர 6 மணிக்கு தான் புறப்படுகிறார். அதற்குள் பரப்புரை இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. விஜய் ஒரு குறிபிட்ட இடத்திற்கு வந்தபோது, கூட்டத்தால் அவரது வாகனம் செல்ல முடியவில்ைல. அப்போது போலீசார் அவரது வாகனம் செல்ல போலீசார் கூட்டத்தை கலைத்து வழியை
ஏற்படுத்தினர்.
* பரப்புரை துவங்குவதற்கு முன்பே நெரிசல் சம்பவம் நடந்ததா என்று சொன்னால், விஜய் 12 மணிக்கு வரவேண்டும். இதனால் சம்பவ இடத்திற்கு மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். 3 மணியில் இருந்து கூட்டம் அதிகமாக கூட ஆரம்பித்தது. ஒரு பக்கம் கூட்டம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. மற்றொரு பக்கம் காலையில் இருந்து மக்கள் கூடியுள்ளனர். அவர்களுக்கு வெப்பம் காரணமாக உடல் சோர்வு ஆகிவிட்டது. அவர்களுக்கு தண்ணீர் கிடையாது. அதிகளவில் உடல் சோர்வு ஏற்பட்டு கீழே உட்கார ஆரம்பித்துவிட்டனர். அந்த நேரத்தில் விஜய் வாகனம் உள்ளே வருகிறது. அப்போது அவருடன் வந்த கூட்டம், ஏற்கனவே இருந்த கூட்டம் எல்லாம் சேர்ந்து மிக அதிகளவில் நெரிசல் ஏற்பட்டது. விஜய் வாகனம் வரும்போது வாகனத்தின் அருகே உள்ள மக்கள் தள்ளிபோகணும். பின்னால் வந்தவர்கள் அவரது முகத்தை பார்க்க வேண்டும் என்று முன்நோக்கி வருகின்றனர். இதனால் தான் அங்கு நெரிசல் ஏற்பட்டது.
* ஆம்புலன்ஸ் எப்படி கூட்டத்திற்குள் வந்தது என்று கேள்வி எழுப்பினர். எந்த கூட்டம் போட்டாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆம்புலன்ஸ் வசதி செய்வது வழக்கம். அதன்படி விஜய் வரும் போது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து 2 ஆம்புலன்சுகள் வந்தது. அதுமட்டும் இன்றி கட்சியினர் 5 ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளனர். முதலில் போலீசார் மக்கள் கீழே விழுவதை பார்த்து, போன் செய்கிறார்கள். ஆனால் போன் வேலை செய்யவில்லை. இதனால் வயர்லெஸ் மூலம் தகவல் அளிக்கிறார்கள்.
அதன்பிறகு 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது. இரவு 7.15 மணி முதல் 9.45 மணி வரை ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த சம்பவம் நடந்த உடனே அரசு ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி அடுத்த நாளே விசாரணையை தொடங்கிவிட்டார். காவல்துறை சார்பில் மூத்த ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகு தான் விபத்து குறித்து தெரியவரும். அதற்கு முன்பாக எதுவும் தெரியாது.
மார்ச் 2025ல் சப்-கலெக்டர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அப்போது, கரூர் பகுதியில் எந்தெந்த இடங்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி தான் அனுமதி வழங்கப்படுகிறது. கரூர் பேருந்து நிலையம் அருகே முதலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு அனைத்துக்கட்சி கூட்டத்தில் அந்த இடத்தில் நிகழ்ச்சி நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தடை செய்யப்பட்டது. அந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தான் கரூர் வேலுச்சாமிபுரத்தை நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்று முடிவு செய்ததால் தான் தற்போது அனுமதி வழங்கப்பட்டது.
காவல்துறை அந்த கூட்டத்திற்கு 500 பேர் பாதுகாப்பு கொடுத்து இருந்தாலும், நிகழ்ச்சி நடத்தியவர்கள் தன்னார்வலர்கள் போடுவார்கள். சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரிமாறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களை காவல்துறை கண்காணித்து வருகின்றனர். தவறான செய்திகள் பரப்பினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார்: ஆம்புலன்சை பொறுத்தமட்டில் 108 ஆம்புலன்சுகள் வெளிமாவட்டத்தில் இருந்து வரவழைப்பட்டது. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 19 ஆம்புலன்சுகள் உள்ளன.
விபத்து நடந்த இடத்தை சுற்றி 3 பகுதிகளில் தனியார் ஆம்புலன்ஸ்கள் இருந்தது. அதை தவிர 6 ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு நிலையம், மருத்துவ கல்லூரி, மண்கமங்கலம், ஒப்பிடாமங்கலம் பகுதியில் இருந்தது. எங்களுக்கு விபத்து பகுதியில் இருந்து 7.14 மணிக்கு தகவல் வருகிறது. அதன்படி 7.20 மற்றும் 7.23 மணிக்கு நாங்கள் ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம். அங்கு சென்றதும் அங்கு அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது தெரியவருகிறது. அதன்பிறகு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்படுகிறது. கூட்டத்தில் முதலில் நுழைந்தது தவெக ஏற்பாட்டாளர்களின் 2 ஆம்புலன்ஸ்கள் தான். 108 ஆம்புலன்ஸ் பொறுத்தவரை 7.40, 7.50 மணிக்கு தான் வருகிறது.
108 ஆம்புலன்ஸ்கள் 6 ஆம்புலன்சுகள் தான் இயக்கப்பட்டது. மற்றது எல்லாம் தனியார் ஆம்புலன்ஸ் என 50 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டது. கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 220 மருத்துவர்கள் இருக்கிறார்கள். 165 ெசவிலியர்கள், அதுதவிர அன்று சேலத்தில் பொது சுகாதாரத்துறை மாநாடு நடந்தது. இந்த சம்பவம் அறிந்து மாநாட்டில் கலந்துகொண்ட டாக்டர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். கரூர் மருத்துவமனை பிணவறை கொள்ளளவு 28 தான். அதில் ஏற்கனவே பல உடல்கள் இருந்தன. அங்கு 3 அதிகாரிகள் மட்டும் தான் இருந்தனர்.
இந்த சம்பவம் நடந்த பிறகு அருகில் உள்ள மாவட்டங்களுக்கு போன் செய்து அரசு மருத்துவ கல்லூரி டீன்கள் என மொத்தம் 114 டாக்டர்கள் மற்றும் 23 சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் வரவழைக்கப்பட்டனர். இரவு 2 மணிக்கு பிரேத பரிசோதனை ஆரம்பித்தால் கூட மறுநாள் 3 மற்றும் 4 மணி வரை நடந்தது. மறுநாள் காலை 6 மணிக்கு தொடங்கினால் திங்கட்கிழமை வரை தொடர்ந்து இருக்கும். பொதுவாக உயிரிழந்த உறவினர்கள் உடலை விரைவாக கொடுக்கவில்லை என்று அழுத்தம் ஏற்படும். இதனால் 36 மருத்துவ கல்லூரி டாக்டர்களை தொடர்பு கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நல்லெண்ணத்தின்படி ஏற்கனவே துக்கத்தில் உள்ள உறவினர்களுக்கு விரைவாக பிரேத பரிசோதனை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்பட்டது.
கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசியதாவது: வழக்கமாக ஒரு காவலர் 50 பேருக்கு பாதுகாப்பு கொடுப்பது தான் வழக்கம். ஆனால் இந்த கூட்டத்திற்கு ஒரு காவலர் 20 பேருக்கு பாதுகாப்பு வழங்குவது போல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை கூட்டம் பேசும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் விஜய் வாகனம் வந்தபோது கூட்டம் அதிகமாக இருக்கிறது. அவரை பார்த்ததும் கூட்டம் சுற்றி வர தொடங்கினர். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்து டிஎஸ்பி உடனே தவெக நிர்வாகிகளிடம் 50 மீட்டர் தொலைவிலேயே பேசும்படி கூறினார். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரபலமானவர் ஒரு இடத்திற்கு வருகிறார். இதனால் கூட்டம் அதிகமாக வரும் என்று, காவல்துறை தானாக அதை தடை செய்ய முடியாது. நாமக்கல்லில் வழங்கப்பட்ட பாதுகாப்பைவிட கரூரில் 2 மடங்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* கரூர் கொடுந்துயரம் குறித்து நேரம் வாரியாக நடந்ததை தமிழக அரசு ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டு விளக்கம்.
* கரூரில் கூரையை பிரித்துக்கொண்டு தவெக தொண்டர்கள் ஓடிய காட்சிகள் வெளியீடு.
* எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தவெக தொண்டர்கள் கூரை மீதும், விளம்பர போர்டுகள் மீதும் ஏறிய காட்சிகள் வெளியீடு.
* 2 நாட்களுக்கு முன் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூட்டம் நடத்திய அதே வேலுச்சாமிபுரம் தான் விஜய் கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.
* நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை விளம்பர பலகை மீது தவெக தொண்டர்கள் ஏறியதில் பாரம் தாங்காமல் மக்கள் மீது விழுந்தது. அதில் பலர் மயக்கம் அடைந்த காட்சிகள் வெளியீடு.
* நாமக்கல்லில் காவல் துறை நிபந்தனைகளை தவெக தொண்டர்கள் மீறியது தொடர்பான காட்சிகள் வெளியீடு.
* கரூரில் காவல்துறையின் செயல்பாட்டுக்கு பிரசாரதில் விஜய் நன்றி தெரிவித்த காட்சிகள் வெளியீடு.
* காவல்துறை இல்லை என்றால் கரூர் பைபாசில் இருந்து பிரசாரத்துக்கு வந்திருக்க முடியுமா என விஜய் பேசிய காட்சி வெளியீடு.
* கூட்டத்தில் விஜய் பேசும்போது, பொதுமக்களை பார்த்து கொஞ்சம் வழிவிட்டால் ஆம்புலனன்ஸ் சென்றுவிடும் என்றார்.
* தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா நடிகர் விஜயிடம், 9 வயது அஷ்மிகா என்ற சிறுமி மாயமானது குறித்து அறிவிக்க சொல்கிறார். அதன்படி நடிகர் விஜய் ‘தம்பிங்களா 9 வயது சிறுமி மாயமா? கொஞ்சம் கண்டுபிடித்து கொடுங்கள் என்று கூறியபடி தனது பேருந்துக்குள் சென்றுவிட்டார்.
* நடிகர் விஜயிடம் பவுன்சர்கள் கூட்டத்தில் பலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்துவிட்டதாக கூறும் காட்சிகள் வெளியிடப்பட்டது.
* நாமக்கல், கரூர் பிரசாரத்திற்க விஜய் தாமதமாக சென்றதற்கான ஆதாரங்கள் அனைத்தும் வீடியோவாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.