Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம்; அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தினார்; முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்

சென்னை: அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் விளைவாக அதிக கூட்டம் காரணமாக மிதிபடுதல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக கரூர் நகர காவல் நிலையம் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளராகிய மணிவண்ணன், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறக்காவல் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த விவரம் பின்வருமாறு: தமிழக வெற்றிக்கழகம் மேற்கு மாவட்டம் செயலாளர் மதியழகன் அவரது கட்சியின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில், கரூர் வேலுச்சாமிபுரத்தில் 27ம் தேதி கரூர் நகர உட்கோட்டம் துணை கண்காணிப்பாளர் 26ம் தேதி செயல்முறை ஆணையின்படி 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு 27ம் தேதி கனம் காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் மற்றும் கரூர் மாவட்டம் எஸ்பி மேற்பார்வையில் கூடுதல் எஸ்பி, துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள், ஊர்க்காவல்படையை சேர்ந்த 500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீர்செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டு கரூர் நகர மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காலை 9மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மதியம் 12 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10 மணியில் இருந்தே பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் பெருமளவில் வர தொடங்கினார்கள். இதனால் வேலுச்சாமிபுரம் மெயின் ரோடு, கோவை சாலை, முனியப்பன் கோயில் ஜங்சன், கோவை சாலை, திருக்காம்புலியூர் ரவுண்டானா, மதுரை, சேலம் பைபாஸ் சாலை ஆகிய இங்களில் கூட்டம் அதிகளவில் வர தொடங்கினார்கள். கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கொடுத்த விண்ணப்பத்தில் 10 ஆயிரம் தொண்டர்கள் தான் வருவார்கள் என்று எழுதி கொடுத்துள்ளார். ஆனால் பிரசார கூட்டத்திற்கு சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர்.

இந்நிலையில் மாலை 4.45 மணிக்கு தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவர் விஜய் கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையம், தவிட்டுப்பாளையம் வழியாக நுழைந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து தெருவில் அனுமதி இல்லாமல் ரோட்ஷோ, பல்வேறு இடங்களில் நிபந்தனைகளை மீறியும் வரவேற்புகள் நடத்தியும் காலதாமதம் செய்து மாலை 6 மணிக்கு முனியப்பன் கோயில் ஜங்சனில் ராங் ரூட்டில் அதாவது ரோட்டின் வலது புறம் கட்சியின் தலைவர் விஜய் வாகனங்களை அழைத்து சென்று மாலை 7 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களில் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், அதே இடத்தில் அளவுக்கு அதிகமாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தனர்.

இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவ்லதுறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோத செய்து மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனிடமும் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிமுடம் நானும் காவல் துணை கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்.

நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கிய போதும் தவெக தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தாமல் ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தர வேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரியான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி உட்கார செய்ததால் தகர கொட்டகை உடைந்தும், மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால், பொதுமக்கள் பெரும்பாலோனோருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் பொதுக்கூட்டத்திற்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தியும், அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பல மணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தனர்.

நீண்ட நேர காத்திருப்பு போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல் நிலையில் சோர்வடைவு ஏற்பட்டது. இந்த இளைவாக மேற்படி சம்பவத்தில் அதிகளவில் மிதிபடுதல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் நிலைய குற்ற எண்: 855\\\\25US 105. 110. 125(பி), 223 பிஎன்எஸ் ஆக்ட் மற்றும் 3 டிஎன்பிபிடிஎல் ஆக்ட் ன்படி 27ம் தேதி இரவு 9.45 மணிக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.