கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களிடம் சிறப்பு குழுவினர் இன்று விசாரணை நடத்தினர். கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2 எஸ்பிக்கள், 1 ஏடிஎஸ்பி, 5 இன்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 5ம் தேதி முதல் கரூரில் தங்கி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறி இறந்தார்களா? அல்லது மற்றவர்களின் கால்களால் மிதிக்கப்பட்டோ, தாக்கப்பட்டோ இறந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, குழுவில் உள்ள நாமக்கல் எஸ்பி விமலா, சிவில் சப்ளை சிஐடி எஸ்பி ஷியாமளா தேவி தலைமையிலான குழுவினர் தனித்தனி வாகனத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சம்பவம் தொடர்பான ஆவணங்களை சேகரித்தனர். மேலும் தொடர்புடைய அதிகாரிகளை நேரில் சந்தித்து விசாரித்தனர்.
பின்னர் மாலை பயணியர் மாளிகை வந்து ஐஜி அஸ்ரா கார்க்கிடம் சேகரித்த ஆவணங்களை ஒப்படைத்தனர். தொடர்ந்து மாலை 6 மணியளவில் குழுவில் உள்ள 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் மீண்டும் வேலுசாமிபுரம் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்து கிடந்த செருப்புகளை அப்புறப்படுத்தி வேனில் ஏற்றி சென்றனர். இன்று 4வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை அரசு சுற்றுலா மாளிகைக்கு இன்று வரவழைத்தனர். அவர்களிடம் சம்பவம் நடந்தது எப்படி என விசாரணை நடத்தினர்.
* வீடியோ ஒப்படைத்த உள்ளூர் சேனல்கள்
கரூரில் உள்ளூர் டிவி சேனல்கள் பல உள்ளன. சம்பவத்தன்று கூட்ட நெரிசலை இந்த சேனல்களின் ஊழியர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்தது. இதையடுத்து குழுவில் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட டிவி சேனல் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிமையாளர்களிடம் சம்மன் வழங்கினார்.
அதன்படி உள்ளூர் டிவி சேனல் அலுவலக நிர்வாகிகள் இன்று கரூர் பயணியர் மாளிகைக்கு வந்தனர். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். விஜய் வருவதற்கு முன், வந்தபோது, அவர் சென்ற பின்னர் மக்கள் கலைந்து சென்றபோது எடுத்த வீடியோக்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.