கரூர் விஜய் பிரசார துயர சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களே பொறுப்பு: உண்மை கண்டறியும் வழக்கறிஞர்கள் குழு தகவல்
கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரம் நடைபெற்றது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. குழுவில் பாரதி, அழகிரிசாமி, பாலமுருகன், சிவராமன், அருள், முத்துலட்சுமி, சுபாஷ் உட்பட 16 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த குழுவினர் நேற்று கரூருக்கு சென்று சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிறகு, அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அரசு மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சம்பவம் எப்படி நடந்தது என கேட்டறிந்தனர்.
பின்னர் அந்த குழுவினர் அளித்த பேட்டி: 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துதான் இங்கு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அனைவரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு 6 நிமிடம் முதல் 10 நிமிடத்தில் உயிரிழந்துள்ளனர். தங்களின் நிகழ்வுக்கு வரும் கூட்டத்திற்கான பாதுகாப்பை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள்தான் உறுதி செய்ய வேண்டும். சம்பவம் நடைபெற்றது எப்படி, தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து கட்சித் தலைமைக்கு அறிக்கை அளிக்கவுள்ளோம். அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்துக்கும் தேவைப்படும் எனில் எங்கள் குழு விளக்கம் அளிக்கும். இந்த துயரச் சம்பவத்துக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.