கரூர் துயர சம்பவத்தை அரசியலாக்கும் தவெக நிர்வாகிகள்: பேரு அவருதுதான் ஆனா, வழக்கு அவரு போடல... அடுத்தடுத்து வௌியாகும் அதிர்ச்சி வீடியோக்கள்
* பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியாமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டது அம்பலம்
கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் கலந்து கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பத்தை அரசியலாக்குவதிலும், மற்றவர்கள் மீது பழியை போட்டு தப்பிப்பதிலும் தவெகவினர் குறியாக இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அதேபோல், தவெக தலைவர் விஜய்க்கு கடும் கண்டனங்களை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைத்தது.
இதை ரத்து செய்யக்கோரி விஜய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், சிபிஐ விசாரணை கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்படி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்தது தானா என தொடக்கத்திலேயே பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த சந்தேகத்தை உண்மையாக்கும் விதமாக பல வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வௌியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்த பிரித்திக் என்ற பதினோரு வயது மகனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவரது பெயரில் அமன் மாலிக் என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தன்னையும் தன் மகனையும் விட்டுவிட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிப்போன தனது கணவர் இப்போது பணம் பறிக்கும் நோக்கில் தனக்கே தெரியாமல் இந்த வழக்கை போட்டிருப்பதாகவும், அதோடு தனது கணவரை ஏமாற்றி யாரோ தூண்டிவிட்டு இந்த வழக்கு ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் பிரித்திக்கின் தாய் ஷர்மிளா என்பவர் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மற்றொரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, கரூர் சம்பவத்தில் உயிரிழந்த ஏமூரை சேர்ந்த சந்திரா (41) என்பவரது கணவர் பி.செல்வராஜ் என்பவரது பெயரில் சிபிஐ விசாரணை கோரி லக்ஷ்மிநாராயணன் என்ற வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கும் செல்வராஜ் ஒப்புதல் இல்லாமல் போடப்பட்டுள்ளதாக அவரே குற்றம்சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், உங்க பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது தெரியுமா என ஒருவர் கேட்க... அது பற்றி தனக்கு தெரியாது என்கிறார் செல்வராஜ்.
மேலும், வழக்கறிஞர் பெயர் லஷ்மிநாராயணன் என்பவரை தெரியுமா என ஒருவர் கேட்கிறார். அதற்கும் தெரியாது என்கிறார் செல்வராஜ். தொடர்ந்து, எப்படி அந்த பெட்டிசன்ல நீங்க கையெழுத்து போட்டிங்க என மற்றவர் கேட்க முன்னாள் ஊராட்சி தலைவர் ஒருவர் ஒரு பெட்டிசன்ல கையெழுத்து போடச்சொன்னார்...போட்டேன் என முடிகிறது அந்த வீடியோ. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியாமல் ஏமாற்றி கையெழுத்து பெற்று யார் மீதோ பழிபோடும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் யாரோ வழக்கு தொடர்ந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவோ, வரும் காலத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் கூட்டம் நடத்துவது எப்படி என ஆலோசிக்கவோ முயற்சி செய்யாமல், இந்த துயரத்தையும் அரசியலாக்கி ஆதாயம் தேடவும், மற்றவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்கவும் மட்டுமே தவெக நிர்வாகிகள் முனைப்பு காட்டி வருவது மிகவும் கேவலமான அரசியல் என பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். கரூர் துயர சம்பவத்தில் உண்மையை மறைக்க சிலர் செய்யும் தகிடு தத்தங்கள் அவர்களுக்கே எதிராய் போகும் வகையில் அதிர்ச்சி தரும் வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்கிறது. இன்னும் எத்தனை வீடியோக்கள் வௌிவரப்போகிறதோ... இன்னும் என்னவெல்லாம் அதிர்ச்சி காத்திருக்கிறதோ தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.