சென்னை: கரூர் துயர சம்பவத்துக்கு முழுமையான காரணம் தவெகவினர் மட்டுமே என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக வரலாற்றில் நடைபெறாத கொடுந்துயர் பேரவலம் கரூரில் நடந்துள்ளது. கரூர் சம்பவத்தில் பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் தவெகவினர்கள் மட்டும் தான். பொதுமக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். 2 வயது, 8 வயது குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வந்திருக்கலாமா?. கூட்டத்தின் தன்மையை பார்த்து விஜய் செயல்பட்டிருக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளார்.
இதை விட முதல்வர் என்ன செய்ய முடியும்? அரசியல் பண்பாட்டுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வரை நடந்து கொள்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சொல்லாமல், தவெகவினர் மறைமுகமாக சகட்டு மேனிக்கு பேசுவதை கண்டிக்கிறேன். கரூர் துயரச் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தான் காரணம். 10.30 மணிக்கு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு இரவு 7 மணிக்கு தான் கரூர் எல்லைக்கே விஜய் போயிருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து வந்த தொண்டர்களால் ஏற்கனவே இருந்த கூட்டம் இரு மடங்கு ஆகி இருக்கிறது. விஜய் வந்தபோது மூச்சு திணறல் காரணமாக பலர் இறந்துள்ளனர். இதற்கு பொறுப்பு தவெகவினர் தான். காத்துக்கிடந்த பெண்கள், குழந்தைகள் கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கும் என எச்சரிக்கையாக இருந்து விஜய் செயல்பட்டிருக்க வேண்டும்.
விஜய் ஆரம்பத்திலேயே வாகனத்தில் ஏறி கை அசைத்து ரசிகர்களை கலைந்து செல்ல வைத்திருந்தால், இந்த நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தவெக தவறிவிட்டது. இதற்கு திமுகவை குறை சொல்வது நியாயமற்றது. கூட்டத்தை கட்டுப்படுத்துவது கட்சியின் கடமை. தவெகவினர் இதில் தோல்வியடைந்து, பிறரை குற்றம் சாட்டுவது ஏற்கத்தக்கது அல்ல. தவெக தலைவர் விஜய் திருச்சியிலேயே தங்கியிருக்கலாம். மறுநாள் எந்தவிதத்தில் ஆறுதல் சொல்வது என முயற்சித்திருக்கலாம். கரூர் சம்பத்தில் இருந்து விஜய் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கரூர் சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டியது தமிழக வெற்றிக் கழகம் தான். இவ்வாறு அவர் கூறினார்.