Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி கிடுக்கிப்பிடி: 4 துறை அதிகாரிகளிடம் விசாரணை

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டரிடம் எஸ்ஐடி நேற்று விசாரணை நடத்தியது. 4 துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடந்தது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 5ம் தேதி முதல் கரூரில் தங்கி 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணை மேலும் தீவிரப்படுத்த திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்ககளில் இருந்து 5 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே உள்ள 3 குழுக்களுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் விஜய் பிரசாரத்திற்கு சவுண்ட் சர்வீஸ் அமைத்துக்கொடுத்த சவுண்ட் இன்ஜினியர், ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பயணியர் மாளிகைக்கு நேற்று வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம், விஜய் பிரசாரத்தின் போது மின்தடை ஏற்பட்டதா, ஜெனரேட்டர் எதுவும் ஆப் செய்யப்பட்டதா என சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரித்தனர். இந்த விசாரணை தொடர்பாக தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் வரவேண்டியது இருக்கும் என அவர்களை அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து வனத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை அதிகாரிகளை பயணியர் மாளிகைக்கு வரவழைத்து சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

* திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கைது

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (35). தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர் கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவேற்றம் செய்தார். இந்த பதிவு வைரலானது.

இதையடுத்து மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை நேற்று கைது செய்து விசாரணை செய்தி வருகின்றனர். சாணார்பட்டி காவல் நிலையம் முன்பு தவெக தொண்டர்கள் குவிந்து கோஷங்கள் எழுப்பியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* 17ம் தேதி விஜய் நிகழ்ச்சிக்கு மண்டபம் கொடுக்க உரிமையாளர்கள் தயக்கம்

கூட்ட நெரிசலில் பலியான 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திக்கவும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறுவதற்கும் வரும் 17ம்தேதி (வெள்ளி) காலை 10 மணியளவில் விஜய் கரூர் வருகை தர உள்ளார். இதற்காக தனியார் திருமண மண்டபங்களில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, அவர்களுக்கு நிவாரண நிதியும் வழங்குகிறார்.

இதனையடுத்து தவெக நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான ஸ்டார் ஓட்டலில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்து அந்த உரிமையாளரிடம் பேசியுள்ளனர். ஆனால் உரிமையாளர், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் ஓட்டல் உள்ளது. இங்கு நிகழ்ச்சி நடத்தினால் எதாவது பிரச்சனை ஏற்படக்கூடும். இதனால் ஓட்டல் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, 2வது முயற்சியாக திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த தவெக முடிவு செய்தனர். இதற்காக கரூரில் உள்ள 50 தனியார் திருமண மண்டபங்களில், 20 திருமண மண்டபங்களை தேர்வு செய்த தவெக நிர்வாகிகள், அந்த மண்டப உரிமையாளர்களிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர்களும் மண்டபம் கொடுக்க மறுத்துள்ளனர். மீண்டும் ஒரு அசம்பாவித சம்பவம் நடந்து விட்டால் என்ன செய்வது என அவர்கள் திடீரென தயக்கம் காட்டியுள்ளனர்.

இதனால் மண்டபங்கள் கிடைக்காமல் நிர்வாகிகள் தவித்து வருகிறார்கள். 3வது முயற்சியாக கரூர்-சேலம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்து அந்த கல்லூரி நிர்வாகத்தை நாடும் முயற்சியில் இறங்கினர். 17ம்தேதி (வெள்ளி) அன்று கல்லூரி இருப்பதால் கல்லூரில் உள்ள அரங்கத்தை கொடுக்க நிர்வாகமும் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.