Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற கூட்டத்துக்கு 10,000 பேர் கூடுவதாக கூறி அனுமதி பெறப்பட்டது: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் விளக்கம்

சென்னை: கரூர் தவெக கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் எதிர்ப்பார்ப்பதாக கூறி அனுமதி பெறப்பட்டது என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகம் நேற்று அதிகாலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது : கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக 38 நபர்கள் (ஆண்கள்-12, பெண்கள்-16, குழந்தைகள் ஆண்-5, பெண்-5) உயிரிழந்த துயரச் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது.

இச்சம்பவம் குறித்து தெரிந்தவுடன் கூடுதல் கால்வர் துறை இயக்குநர் கரூர் விரைந்துள்ளார். மேலும், பல அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கரூருக்கு விரைந்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கரூரில் 10,000 பேர் எதிர்பார்ப்பதாக கூறி அனுமதி பெறப்பட்டது. இருப்பினும் திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூரில் ஏற்கனவே கூடிய கூட்டத்தை கருத்தில் கொண்டு எஸ்பி - 1, ஏடிஎஸ்பி - 2, டிஎஸ்பி - 4 மற்றும் ஆய்வாளர்-17 உள்பட சுமார் 350 காவல் ஆளிநர்களுடன் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மேலும், சுமார் 150 காவல் ஆளிநர்கள் கரூரின் மற்ற பகுதிகளில் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்தனர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் மதியம் 12 மணிக்கு அக்கட்சியின் நிறுவனர் விஜய் கரூர், வேலுசாமிபுரத்திற்கு வருவதாக 26.9.2025ம் தேதியன்றே அறிவிக்கப்பட்டது.

ஆனால், மாலை சுமார் 7:10 மணிக்குத்தான் தமிழக வெற்றிக் கழக நிறுவனர் வந்தடைந்தார். இதற்கிடையில், காலை சுமார் 11 மணி அளவிலிருந்தே கூட்டம் கூடத்தொடங்கியது. பரப்புரை கூட்டம் நடைபெற்ற வேலுசாமிபுரம் என்ற இடமானது கரூர் - ஈரோடு சாலையில் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கூட்டம் நடத்த முன்னதாக கேட்ட உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண்டானா என்ற இரண்டு இடங்களும் இதைவிட குறுகலான இடங்கள் என்பதால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2 நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் வேறு ஒரு கட்சி பெரிய பரப்புரை கூட்டம் நடத்திய போது சுமூகமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. வரவேற்பு கொடுத்த இடத்திலிருந்து கூட்டம் தொடர்ந்து வாகனத்தை பின் தொடர்ந்து வந்ததால் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றது. தமிழக வெற்றிக் கழக நிறுவனர் பேச ஆரம்பித்த போது காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி நன்றி தெவிரித்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.