கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி; இன்று பனையூர் செல்லும் சிபிஐ விஜய்யிடம் விசாரணையா? 306 பேருக்கு சம்மன், 10 பேரிடம் கிடுக்கிப்பிடி
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 306 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நேற்று சிபிஐ முன் தனித்தனியாக ஆஜரான 10 பேரிடம் துருவி, துருவி விசாரணை நடந்தது. இன்று பனையூர் செல்லும் சிபிஐ அதிகாரிகள், விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான 6 பேர் குழுவினர், மதுரையில் கூடுதலாக வந்த சிபிஐ குழுவினர் 6பேர் என மொத்தம் 12பேர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து சிபிஐ விசாரணை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2 நாட்களாக சாலையின் இருபுறமும் தடுப்புகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 31ம்தேதி 6 மணி நேரம், நேற்றுமுன்தினம் (1ம்தேதி) 9 மணி நேரம் என சுமார் 15 மணி நேரம் ஆய்வு மற்றும் விசாரணை பணிகளை சிபிஐ குழுவினர் செய்தனர். இந்நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்க், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஊழியர்கள், மெடிக்கல் ஷாப் , பேக்கரி கடை , ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மற்றும் அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் என 306 பேர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தெரிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதிக்கு சம்மனுடன் வந்த 10 பேர், சிபிஐ முன் தனித்தனியாக ஆஜராகினர். அப்போது அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு எத்தனை மணியில் இருந்து ரசிகர்கள் வரத்தொடங்கினார்கள், ரசிகர்களுக்காக குடிநீர் உள்ளிட்ட வசதிகள் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததா, விஜய் வருவதற்கு முன் ரசிகர்கள் எவ்வளவு பேர் கூடியிருந்தார்கள், ரசிகர்களை ஒழுங்குப்படுத்த தவெக நிர்வாகிகள் அந்த இடத்தில் இருந்தார்களா,
விஜய் எத்தனை மணிக்கு வந்தார், விஜய் பின்னால் எத்தனை வாகனங்கள் வந்தன, விஜய் பேசிக்கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் வந்ததா, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகளில் ஒரு குழுவினர் இன்று சென்னை பனையூர் செல்லவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இந்நிலையில், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் சிபிஐ குழுவினர், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் மற்றும் தேர்தல் பிரசார பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் நடந்த பின் வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கும் தவெக தலைவர் விஜய்யிடமும் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவே பனையூருக்கு சிபிஐ வர முக்கிய காரணம் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
* ஆதவ் அர்ஜூனா ஆதரவாளர் ராம்குமாரை தேடும் சிபிஐ
சென்னையில் தவெக தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா வாய்ஸ் ஆப் காமர்ஸ் (குரல் வர்த்தகம்) நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ராம்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், ஆதவ் அர்ஜூனாவின் தீவிர ஆதரவாளர். கரூர் சம்பவம் தொடர்பாக ராம்குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். கரூர் காமராஜபுரம் 3வது தெருவில் ராம்குமார் வசித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் குழு, நேற்று குறிப்பிட்ட முகவரிக்கு சென்றனர். அங்கு ராம்குமார் வீடு பூட்டி இருந்தது.
வீட்டை செல்போனில் போட்டோ எடுத்து கொண்ட சிபிஐ குழுவினர், வீட்டின் அருகில் மற்றும் மாடியில் குடியிருப்பவர்களிடம் ராம்குமார் குறித்து விசாரித்தனர். எத்தனை நாட்கள் தங்கியிருந்தார், எப்போதில் இருந்து வீடு பூட்டி இருக்கிறது, இப்போது ராம்குமார் எங்கே உள்ளார் என தீவிரமாக விசாரித்தனர். கரூர் சம்பவத்துக்கு பின் வீடு பூட்டி இருப்பதும், சென்னைக்கு சென்றிருக்கலாம் என்றும் அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிபிஐ குழுவினர் ராம்குமாரை தேடி சென்னைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
