சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதையடுத்து, போலீசார், சிறப்பு விசாரணை குழுவினர் அளித்த ஆவணங்கள், எப்ஐஆர் அடிப்படையில் புதிய முதல் தகவல் அறிக்கையை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் கடந்த 22ம் தேதி சிபிஐ தாக்கல் செய்தது.
அதில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் நாளை (28ம் தேதி) கரூர் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
