திருச்சி: கரூரில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த கரூர் மாவட்ட செயலாளரை நேற்று இரவு கைது செய்தனர். கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த நடிகர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட பலர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் குஜிலியம்பாறை விரைந்து சென்று நேற்று இரவு அவரை கைது செய்து கரூர் அழைத்து வந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.
+
Advertisement