கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் விஜய்யின் நெருங்கிய நண்பரிடம் எஸ்ஐடி விசாரணை: 2 நாள் காவல் முடிந்து மாவட்ட செயலாளர் சிறையில் அடைப்பு
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் எஸ்ஐடி விசாரணை நடத்தியது. இதற்கிடையே, 2 நாள் எஸ்.ஐ.டி காவல் முடிந்து கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 9ம் தேதி 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அப்போது பிரசாரத்திற்கு 60க்கும் மேற்பட்ட டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன், ஜனநாயகன் படத்தில் கரூர் காட்சிகளை இடம் பெற செய்வதற்காக இவை கொண்டு வரப்பட்டதா என அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ஆனால் மதியழகன், ட்ரோன்கள் ஏற்பாடு எல்லாம் தலைமை கழகம் தான் என்றும், தனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்ததாக தெரிகிறது. நேற்று காலையும் விசாரணை நீடித்தது. இந்நிலையில் 2 நாள் காவல் முடிவடைந்ததால் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று பிற்பகல் 2.54 மணிக்கு கரூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் மதியழகனை போலீசார் ஆஜர்படுத்தப்படுத்தினர். அப்போது மதியழகனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதால், திருச்சி மத்திய சிறையில் மதியழகன் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். அதன்படி அவர் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். நேற்று மதியம் 12 மணிக்கு பார்த்திபன் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முன்பு ஆஜரானார். கரூரில் விஜய்பிரசாரத்துக்கு கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்தவர்களில் பார்த்திபனும் ஒருவர் என கூறப்படுகிறது. எனவே பொதுக்கூட்டம் தொடர்பாக என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. பொது மக்களுக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் பார்த்திபனிடம் விசாரணை நடந்தது. மாநகர மாவட்ட செயலலாளர் தமிழன் பார்த்திபன், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராவார். விஜய் மூலமாக அவர் சினிமாவிலும் நடித்துள்ளார்.