Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கரூர் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் தலையில் தேங்காய் உடைத்து 500 பக்தர்கள் நேர்த்திகடன்

கிருஷ்ணராயபுரம்: கரூர் மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இதையடுத்து நேற்று காவிரியில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சக்தி அழைப்பும், இரவு அம்மன் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. விடிய விடிய அம்மன் வீதி உலா சென்று அதிகாலை கோயிலை வந்தடைந்தது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் முன்புறம் உள்ள கொடி மரத்தில் விளக்கேற்றப்பட்டது. அப்போது பூசாரி ஆணிகால் செருப்பு அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி இன்று(4ம் தேதி) காலை கோலாகலமாக நடந்தது.

இதற்காக ஆடி முதல் நாளிலிலிருந்தே விரதம் இருந்த தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து விட்டு வந்து கோயில் முன் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் வந்து வரிசையாக அமர்ந்திருந்தனர். பலர் சாமிக்கு முடி இறக்கி மொட்டை தலையுடன் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பரம்பரை பூசாரிகள் அருள்வந்து ஆடி, வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தனர். முதலில் சக்தி தேங்காய் என இரண்டு சமுதாயத்தை சேர்ந்த 14 பேருக்கு தலையில் தேங்காய் உடைக்கப்பட்ட பின்னர், வேண்டுதல் பக்தர்களுக்கு வரிசையாக தேங்காய் உடைக்கப்பட்டது.

இதில 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தலையில் தேங்காய் உடைக்கப்பட்டன. பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினமே மேட்டுமகாதானபுரம் வந்து தங்கியிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். உடைத்த தேங்காய்களை பக்தர்கள் மற்றும் விழாவில் பங்கேற்றவர்கள் சேகரித்து எடுத்து சென்றனர்.