சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க கரூர் போலீஸ் சென்னை விரைந்தது: எஸ்.ஐ.டி.யில் 2 பெண் எஸ்.பிக்கள்
கரூர்: கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவிடம் இன்று கரூர் போலீசார் வழக்கு விசாரணை ஆவணங்களை ஒப்படைக்கின்றனர். கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதில் நேற்றுமுன்தினம் வரை 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். எஞ்சிய 2 பேரும் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி எம்பி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் செல்வபெருந்தகை, திருமாவளவன், சீமான், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். ஆனால் தவெக நிர்வாகிகள் யாரும் இதுவரை வந்து எட்டிக்கூட பார்க்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை முதல்வர் அமைத்தார். இதன்படி அருணா ஜெகதீசன் கரூரில் 2 நாள் முகாமிட்டு விசாரணை நடத்தினார். மேலும் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்த் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தலைமை பண்புக்கே தகுதி இல்லாதவர் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.
மேலும் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவில் சியாமளா தேவி, விமலா ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினரிடம் கரூர் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி பிரேமானந்த் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க இன்று சென்ைன புறப்பட்டு சென்றார். இன்று மாலைக்குள் வழக்கு ஆவணங்கள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.