Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் சம்பவம் போல் எங்கேயும் நிகழக்கூடாது: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபின் நிர்மலா சீதாராமன் பேட்டி

கரூர்: கரூர் சம்பவம் போல் நம் நாட்டில் எங்கேயும் நிகழக்கூடாது. இங்கு என்ன நடந்ததோ அதை பிதமரிடம் தெரிவிப்பேன் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம்தேதி தவெக சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று கரூர் வந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சம்பவம் பற்றி அவரிடம் கலெக்டர் தங்கவேல், எஸ்பி ஜோஸ் தங்கையா விளக்கினர். பின்னர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து ஏமூர் சென்ற நிர்மலா சீதாராமன், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனும் வந்திருந்தார்.

பின்னர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் பேசுவதை கேட்டாலே எனக்கு வயிறு எல்லாம் கலங்குற நிலைமையில் நின்றேன். 7 வயது மகனை இழந்த தாய். மனைவியை இழந்த 60 வயது பெரியவர், அண்ணனை இழந்த பெண், மகனை இழந்த தாய் ஆகியோரிடம்பேசினோம். பெரும்பாலும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கதறி அழுவதை கேட்டால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. இது அதிர்ச்சியை தருகிறது. இந்த மாதிரி ஒரு சம்பவம் இனி நம் நாட்டில் எங்கேயும் நிகழக் கூடாது. ரொம்ப பரிதாபமான நிலைமை. மருத்துவமனையில் படுத்துக்கொண்டு மூச்சு விடமுடியாத நிலைமையிலும் அவர்கள் சொன்னதை எல்லாத்தையும் பிரதமரிடம் சொல்ல இருக்கிறேன்.

அடிபட்டவர்களையும், இறந்தவர்களின் குடும்பத்தை பார்ப்பதற்கு தான் வந்து உள்ளோம். இதில் வேறு ஒரு விஷயமும் இல்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள் நாங்கள் சரியான முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம் என சொல்கிறார்கள். நாங்கள் வந்து சேர்ந்ததற்கு இன்று கொஞ்சம் பரவாயில்லை என பாதிக்கப்பட்டவர்களும் சொல்கிறார்கள்.சம்பவம் நிகழ்ந்தது பற்றி சொன்னார்கள். கும்பல் அதிகமாக இருந்தது. எதிர்பார்த்ததை மிஞ்சி அதிகமானோர் வந்து விட்டார்கள். பில்டிங் மேல் ஏறியவர்கள் எல்லாம் கீழே விழுந்தார்கள். தகர கூரை மேல் நின்று கொண்டிருந்தவர்கள் வழுக்கி கீழே விழுந்து விட்டார்கள். அதன் பிறகு கம்பத்து மேல் விழுந்தார்கள். மின்சாரம் போய்விட்டது.

குடிக்க கூட தண்ணீர் வசதி, சாப்பாடு வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். யாருடைய கவன குறைவு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. நான் பிரதமரின் ரெப்ரசனேட்டிவ் ஆக வந்துள்ளேன். ஒரு கட்சியோட தலைவரோ இல்லை. இன்னொரு கட்சி உடைய தலைவரோ இல்லை. எங்கள் கட்சியுடைய தலைவரோ ஏதோ சொல்லி இருந்தால் கூட அதை பத்தி பேசுவதற்கு நான் இங்கே வரவில்லை. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் பிரதமரிடம் ரிப்போர்ட் பண்ணுவேன். அதுக்குப் பிறகு என்ன ஆகுது என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.