Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரில் 41 உயிர் பறிபோக யார் காரணம்? வெளிநடப்புக்கு பின் எடப்பாடி பேட்டி

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: அரசின் அலட்சியத்தால் தான் கரூர் சம்பவம் நடந்தது. தலைமைச் செயலகத்தில் பொறுப்பு டிஜிபி, ஏடிஜிபி பேட்டி கொடுக்கிறார்கள். அரசு திட்டங்களை எடுத்துச் சொல்லத்தான் நியமித்தனர். ஆனால் தவெக தலைவர் இதையெல்லாம் பின்பற்றியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறினர். ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்ட பின் எப்படி கருத்து சொல்லலாம். கமிஷனிடம் தானே சொல்ல வேண்டும்.

அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது. இன்று உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளித்திருக்கிறது. கரூர் சம்பவம் அரசின் அலட்சியம், 41 பேர் இறந்ததற்கு அரசுதான் பொறுப்பு. இதை முதல்வர் தமிழர் உணர்வு என்கிறார், அதே உணர்வில் தான் நானும் பேசுகிறேன். சம்பவத்திற்கு மறுநாள் காலை நான் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஆறுதல் சொன்னேன். நான் அரசியல் பேசவில்லை.

சட்டசபையில் நான் பேசிய பின் பதில் சொன்னால் பரவாயில்லை. ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டு, முதல்வர் பேசுகிறார். ஏன் இந்த பதற்றம் ஆக உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சி பேசும், அரசு பதிலளிக்கும். இன்று அதற்கு மாறாக முதல்வர் முதலில் பேசுகிறார் என்றால், இதில் ஏதோ நடந்திருக்கிறது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பார். அதனாலே பதற்றம்.

செருப்பு வீச்சு, மின்விளக்கு அணைப்பு, தடியடி எல்லாம் விசாரணையில் வரும். இந்த ஆட்சியில் நடந்த தவறை மறைப்பதற்காக ஏதேதோ பேசுகிறார். நானும் கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை. தமிழர் உணர்வோடு தான் பேசுகிறேன். வேண்டுமென்றே திட்டமிட்டு மர்மத்தை மறைக்கத்தான் ஒவ்வொரு அமைச்சராக இடைமறித்து கருத்தைச் சொன்னார்கள். பிரபலமானவர்கள் வரும்போது கூட்டம் வரும்தான்.

ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 4 இடங்களில் ஏற்கனவே கூட்டம் நடந்திருக்கிறது. கூட்டத்துக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசு, இதனை சரிசெய்யுங்கள் என்று சொல்ல வேண்டும். நிகழ்வை மறைக்க நாடகம் நடத்துகிறது. நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்லவில்லை. என்ன குறைபாடு, எதை சரி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றுதான் பேசினோம். அதுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கவில்லை, இந்த அரசின் அலட்சியம்தான் 41 உயிர் பறிபோகக் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.