தமிழக அரசியல் வரலாற்றில் பிரசாரம் அடிப்படையில் கரூரில் நடந்திருக்கும் சோக நிகழ்வுகளை ஒரு கரும்புள்ளியாகவே கருத வேண்டும். ரசிக மனப்பான்மையை அரசியலுக்கு மடைமாற்றம் செய்யும்போது எவ்வளவு சிக்கல்கள் எழும் என்பதற்கு தவெக தலைவர் விஜய் இப்போது நம் கண்முன்னே சான்றாக திகழ்கிறார். விசிலடிச்சான் குஞ்சுகளை மாவட்ட நிர்வாகிகளாக அவர் மாற்றும்போது, அரசியல் களத்திற்கு தொண்டர்களை அழைத்து வரும் விதமும் அதேபோல்தான் இருக்கும்.
தவெக தலைவர் ஓரிடத்தில் பிரசாரம் செய்கிறார் என்றால், அங்கு அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் பனை மரத்தில் ஏறி நிற்கின்றனர். மின்கம்பங்களிலும், டிரான்ஸ்பார்ம்களிலும் ஆபத்தை அறியாது ஏறி அமருகின்றனர். கர்ப்பிணிகள், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என அரசும், காவல்துறையும், ஏன் தவெக தலைவரும் கூறிய பிறகும் கூட, பலர் குழந்தைகளை கூட்டத்திற்கு விஜய்யை பார்ப்பதற்கு அழைத்து வருகின்றனர்.
செல்லும் இடங்களில் எல்லாம் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் மாஸ் கட்டுவது மட்டுமே தவெக தொண்டர்களின் தலையாய பணியாக உள்ளது. ரசிகர்களும், தொண்டர்களும்தான் அப்படி இருக்கிறார்கள் என்றால், தவெக தலைவரும் அப்படியே உள்ளார். காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பேச வேண்டிய அவர், அந்த நேரத்தில்தான் சென்னையில் இருந்தே திருச்சிக்கு புறப்படுகிறார். நாமக்கல் பிரசார கூட்டத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு போய் சேர்ந்துள்ளார்.
நண்பகல் 12 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்திட காவல்துறை நேரம் ஒதுக்கி, பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் இரவு 7 மணிக்கு விஜய் அங்கு போய் சேர்ந்துள்ளார். காலை 6 மணி முதலே அங்கு காத்துக் கிடந்த தொண்டர்களும், ரசிகர்களும் உண்ண உணவிற்கு, குடிக்க நீரின்றி வெயிலில் வாடி கிடந்துள்ளனர். தொடர்ந்து விஜய் வந்தவுடன் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி இப்போது பலி எண்ணிக்கை 40ஐ தொட்டுள்ளது. பலர் அங்குள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
மனிதர்களை மனிதர்களாக மதிக்காத மனப்பாங்கே இத்தைகய உயிர்பலிகளுக்கு காரணம் எனலாம். ஒரு அரசியல் கட்சியின் மாநாடு, பிரசார கூட்டம் என்றால், அதற்கேற்ற ஏற்பாடுகளை நிர்வாகிகள் முன்கூட்டியே களம் இறங்கி செய்திட வேண்டும். தங்களது செல்வாக்கை காட்டுகிறோம் என்கிற எண்ணம் மட்டுமே மேலோங்கினால், இத்தகைய துயர சம்பவங்களை மட்டுமே எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என நாம் காலரை தூக்கிவிட்டு ெகாண்டிருக்கும் இந்நாளில், இத்தகைய சம்பவங்கள் நம்மை தலைகுனியவே வைக்கும். உ.பி., பீகார் என படிப்பறிவு குறைந்த மாநிலங்களில் கூட இத்தகைய ரசிக மனப்பாங்குகளோ, உயிரை பணயம் வைக்கும் நிகழ்வுகளோ பெரிய அளவில் இல்லை. கரூர் சம்பவத்திலும் நமக்கு மிச்சமிருக்கும் நம்பிக்கை திராவிட மாடல் ஆட்சியின் துரித செயல்பாடுகள்தான்.
சம்பவம் நடந்த உடனே முதல்வர் உத்தரவின் பேரில் இரு அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு ஓடோடி சென்றனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் அங்கு சென்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
காவல்துறையும், அரசு இயந்திரங்களும் கரூரில் முடுக்கி விடப்பட்டு, அரசு மருத்துவமனைகள் துரித கதியில் இயங்கின. தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் என அரசின் உதவிக்கரங்கள் நீண்டது பாராட்டுக்குரியது. விசாரணை கமிஷனின் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் இதுபோன்ற அரசியலுக்கு பாடம் கற்பிக்கட்டும்.