கயத்தாறு: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுதினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கி உள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதுபற்றி எதுவும் கூற முடியாது.
அது சட்டத்திற்கு புறம்பானது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னால் தான் எதையும் கூற முடியும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாதி வன்மம் இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார். அந்தக் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. கரூர் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். இதுபோன்று பல சம்பவங்கள் உயிரிழப்புக்கள் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கும் கடமை இருக்கிறது. காவல்துறைக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை தான் இருக்கிறது. மக்களுக்குத்தான் முழு பொறுப்பும் இருக்கிறது என்றார்.