சென்னை: விஜய் கரூரில் கடந்த 27ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 8 எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்தார். இந்த குழுவின் தலைவராக ஹேமமாலினி எம்.பி நியமிக்கப்பட்டார். ஆய்வுக்குழுவின் விசாரணைக்குப் பிறகு, ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: கரூரில் நடந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்த சோகத்துக்கான முதன்மை காரணங்கள் என்ன? உள்ளூர் அதிகாரிகளால் செய்யப்பட்ட முதற்கட்ட ஏற்பாடுகள், இதுவரை அடையாளம் காணப்பட்ட குறைபாடுகள், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவற்றின் பகுப்பாய்வு அறிக்கை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதற்கான அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும்.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன? நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன? தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் சோகத்திற்கு பங்களித்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை தயவு செய்து பரிந்துரைத்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.