சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய், சனிக்கிழமைதோறும் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை நடத்தி வருகிறார். அந்தவகையில் நேற்று முன்தினம் நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரத்தை மேற்கொண்டார். கரூரில் விஜய் பிரசாரம் செய்யும்போது ரசிகர்கள் கட்டுப்பாட்டை இழந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கு நாடு முழுவதும் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலர் இரங்கல் மற்றும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் மற்றும் கண்டன பதிவு வருமாறு:
* ஜி.வி.பிரகாஷ் குமார்: கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது, எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவிக்கிறேன். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
* சூரி: மனதை உறைய வைக்கும் இந்த விபத்து, அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும், அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், இறைவன் கருணையால் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களை தெரிவித்து, மனதாலும் மற்றும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்.
* வடிவேலு: கரூரில் நடந்த துயர சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இறந்துபோன இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பிஞ்சு குழ்ந்தைகளை நினைத்து கண்ணீர் வருகிறது. இனி ஒரு உயிர்கூட போகக்கூடாது என்று தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று உதவும் தமிழக முதல்வரை பார்த்து, மக்களை போல் நானும் ஆறுதல் அடைகிறேன்.
* பா.ரஞ்சித்: கரூர் பெருந்துயரம் நெஞ்சை பதற வைக்கிறது. தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களை பற்றி அறிந்து பெரும் அதிர்சியும், மன வேதனையும் அடைகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
* மீசை ராஜேந்திரன்: தனது தொண்டர்களுக்கு பிரச்னை வந்தவுடன், விஜய் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்க வேண்டும். அதைவிடுத்து அவர் சென்னை வந்துவிட்டார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
* சத்யராஜ்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து, சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ. தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா, அது திரும்பவும் வராம பாத்துக்கோ.
* கார்த்தி: கரூரில் இருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் விரைவில் நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடக்காமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்.
* பிரபுதேவா: கரூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
* சரத்குமார்: கூட்டத்தில் கலந்துகொண்ட 7 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 40 பேருக்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியும் பெரும் வேதனை அளிக்கிறது.
* அமீர்: என்று தணியும் இந்த சினிமா மோகம்? உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழந்தைகள் பலியா? கரூரில் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள்?
* மாரி செல்வராஜ்: கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. கண்ணீர் முட்டுகிறது.
* வைரமுத்து: தாங்க முடியவில்லை, இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது. அந்த மரணங்களுக்கு முன்னும் பின்னுமான மனித துயரங்கள் கற்பனையில் வந்து, வந்து கலங்க வைக்கிறது. பாமர தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா? இந்தவகையில் இதுவே கடைசி துயரமாக இருக்கட்டும். ஒவ்வொரு உயிருக்கும் என் அஞ்சலி. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்.
* தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்: கரூர் பிரசார கூட்டத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் அனுதாபங்களை தெரிவிப்பதுடன், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெறவும் பிரார்த்தனை செய்கிறோம்.
* நடிகர் ரஹ்மான்: இவ்வளவு பேரிழப்பை சந்தித்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எந்த அரசியல்வாதிக்காகவும், எந்த நடிகருக்காகவும், நம் உயிரை பறிகொடுக்க வேண்டிய அளவுக்கு இது அவசியம் அல்ல. நாம் அனைவரும் அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்வோம்.
* டி.ராஜேந்தர்: கரூரிலே நடந்துவிட்டது ஒரு அசம்பாவிதம். இந்த துயர சம்பவத்தை பார்க்கும்போது, செய்திகளை கேட்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. தமிழகமே பரிதவிக்கிறது. 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 39 உயிர்கள் ஆகியிருக்கிறது பலி. ஆண்டவா... இது என்ன கொடுமை. கொத்து கொத்தாக இத்தனை உயிர்கள் சாயலாமா. கரூரில்தான் இப்படி ஒரு கண்ணீர் சம்பவம் நிகழலாமா. அந்த உயிர்களை இழந்து வாடக்கூடிய அவர்களுடைய இல்லத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். கரைபுரண்டு ஓடும் கண்ணீர் அஞ்சலியை கரூருக்கு அனுப்புகிறேன்.