சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் படங்களுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் குடும்பத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற 15ம் தேதி ரூ.50 ஆயிரம் வீதம் வழங்க இருக்கிறோம்.
தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கி இருக்கிறது. இன்னும் கூடுதலாக நிதி வழங்க வேண்டும். மேலும் உயிரிழந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதை கடந்து இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட பா.ஜ. கூட்டணி கட்சிகள் நினைக்கிறது. விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை.
விஜய்யை கைது செய்ய வேண்டும், சிறையிலடைக்க வேண்டும் என வலியுறுத்தவில்லை. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த பிரச்னையில் நேர்மையாக அணுகிக் கொண்டிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம்.
கரூர் துயரம் தொடர்பாக அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு குழு அமைத்திருப்பதையும் வரவேற்கிறோம். இது போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது. இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் மீது வக்கீல் ராகேஷ் கிஷோர் செருப்பு வீச முயற்சி செய்திருக்கிறார். ராகேஷ் கிஷோரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.