திருச்செந்தூர்: கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாகவே பாஜ நிலைப்பாடு எடுத்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று திருச்செந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தவெக தலைவர் விஜய்க்கு இசட் பிரிவு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவதாக கேட்பதால் கொடுக்கின்றனர். கருர் நிகழ்வில் அவருக்கு பாதுகாப்பு இருந்தது. மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை.
கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அறிவுறுத்தியது தொடர்பாக சட்ட முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது. இந்த நிகழ்வுகளை தவிர்க்க அரசியல் கட்சிகள் ஒரு இடத்தை வாங்கி அங்கு வைத்து கூட்டம் நடத்திக் கொள்ளலாம். தெருக்களில் போவது நெரிசலை தான் ஏற்படுத்தும். மேலை நாடுகளைப் போல ஒவ்வொரு தலைவருக்கும் ஒரே இடத்தில் நேரம் ஒதுக்கி பரப்புரையை கொண்டு வரலாம்.
விஜய்க்கு ஆதரவாக எச்.ராஜா பேசியது குறித்து கேட்டதற்கு பாஜவே அந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஹேமமாலினி எம்பி தலைமையிலான கண்காணிப்பு குழு விஜய்க்கு ஆதரவாக தான் பேசியதை நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். விஜய் கரூர் பரப்புரைக்கு வந்ததால் தான் அந்த கூட்டம். அதனால் அவர் தான் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்திருந்தால் அது முற்றுப் பெற்றிருக்கும்.
அதை விட்டு விட்டு அரசு, காவல்துறை மீது பழிபோட்டு விட்டு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதால் தான் சிக்கல் ஏற்படுகிறது. பாஜ, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரப்பார்க்கிறது. அதிமுகவும் அதே கூட்டணியில் உள்ளதால் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறது. இந்தி மும்மொழிக்கொள்கை, திராவிடம் இரு மொழிக்கொள்கை, தமிழ் தேசியத்துக்கு தமிழ் மொழிக்கொள்கை மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
* ஆடு, மாடு, மரம், மலை முடிஞ்சுது... அடுத்து கடலை தேடி போகும் சீமான்
சீமான் ஏற்கனவே ஆடு, மாடு மாநாடு, மரம் மற்றும் மலைகள் மாநாடு நடத்தி உள்ளார். இந்த சூழலில், தூத்துக்குடியில் வரும் நவ.15ம் தேதி கடல் அம்மா மாநாட்டை சீமான் நடத்த உள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காக சீமான் நேற்று காலை திருச்செந்தூர் அமலிநகர் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மீனவர்களது படகில் சீமான் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார்.
அவருடன் 9 படகுகளில் நிர்வாகிகள் உடன் சென்றனர். தொடர்ந்து சீமான், நிருபர்களிடம் கூறுகையில், ‘பூமியில் 71 விழுக்காடு கடல் நீர் தான் உள்ளது. கடல் என்றால் என்ன? அதன் பயன் என்ன? கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம். ஏற்கனவே மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு நடந்தது. கரூர் சம்பவத்தால் அந்த செய்தி மக்களிடம் போய் சேரவில்லை’ என்றார்.