கரூர் சம்பவம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் சிபிஐயிடம் தான் முறையிட வேண்டும்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக காவல்துறை சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணையின் உண்மை தன்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றால் சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஐந்து மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அரசு தரப்பு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்ததோடு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் கரூர் விவகாரம் தொடர்பாக பிரபாகரன் என்பவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்நோய் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஒரு முறையீட்டை வைத்தார்.
அதில்,‘‘கரூர் சம்பவம் தொடர்பான விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று முன்னதாக எங்களது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதனை திரும்பெப்பெற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும் எங்களது தரப்பு மனுவை தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘கரூர் விவகாரம் ஏற்கனவே சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதுதொடர்பாக எதுவாக இருந்தாலும் சிபிஐயிடம் தான் முறையிட வேண்டும். கரூர் வழக்கை வரும் டிசம்பர் 12ம் தேதி பட்டியலிட உத்தரவு பிறப்பிக்கிறோம்’’ என்றனர்.
 
  
  
  
   
