டெல்லி: கரூர் சம்பவம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் சிபிஐயிடம் தான் முறையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டோரிடம் வீடியோ காலில் பேசி கரூருக்கு நேரில் வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கில் தலா ரூ.20 லட்சம் தவெக சார்பில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களில் 37 பேரின் குடும்பத்தினரை சொகுசு பஸ்களில் கடந்த 27ம் தேதி சென்னைக்கு வரவழைத்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஜய் சந்தித்து பேசினார்.
அப்போது, ஒவ்வொருவருக்கும் ஆறுதல் கூறி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதற்கிடையில் 41 பேர் இறந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரித்த நிலையில், விசாரணையின் உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர சிபிஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதனால் உச்சநீதிமன்றத்தில் 5 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து, இந்த விவகாரத்தில் அரசு தரப்பு விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில் கரூர் விவகாரம் தொடர்பாக பிரபாகரன் என்பவர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்நோய் முன்னிலையில் ஒரு முறையீட்டை வைத்தார்.
அதில், ‘கரூர் சம்பவம் தொடர்பான விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை திரும்ப பெற வேண்டும் என்று மாநில காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் ரீதியாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். எனது தரப்பு மனுவை தனியாக விசாரிக்க வேண்டும்’ என்று முறையிட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,” கரூர் விவகாரம் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதுதொடர்பாக எதுவாக இருந்தாலும் சிபிஐயிடம்தான் மனுதாரர் முறையிட வேண்டும். இருப்பினும் கரூர் வழக்கை வரும் டிசம்பர் 12ம் தேதி பட்டியலிட்டு விசாரணை நடத்துகிறோம் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
