கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் கேரள முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம்: இமெயில் மூலம் மிரட்டல்
திருவனந்தபுரம்: கரூரில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று இமெயில் மூலம் மிரட்டல் வந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு நேற்று ஒரு இமெயில் வந்தது.
அதில் முதல்வர் அலுவலகம் மற்றும் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அந்த இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்த விவரம் வருமாறு: கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் கேரள முதல்வர் அலுவலகம் மற்றும் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்.
இவ்வாறு அந்த இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகம் மற்றும் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் இமெயில் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.