புதுடெல்லி: கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பானவழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மனுதாரர் இந்த விவகாரத்திற்கு தொடர்பில்லாத நபர் என்பதால் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேநேரத்தில் தமிழக காவல்துறையின் விசாரணையில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் பின்னர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரில் 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் பிச்சமுத்து என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்னிலையில் நேற்று ஒரு முறையீட்டை வைத்தார்.
அதில், “உயர்நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்ட வழக்கில் தான் ஒரு மனுதாரராக இல்லை என்றாலும், எனது 13 வயது மகனை இழந்து பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு தொடர்பான உண்மை நிலையை வெளிக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கை வரும் 10ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தார். இதேப்போன்ற கோரிக்கையோடு பாஜ கவுன்சிலர் உமா ஆனந்தன் என்பவரும் கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.