விதிமுறைகளை கடைப்பிடிக்காத தவெக: கூட்டம் அலைமோதியபோது
* போலீஸ் கோரிக்கை நிராகரிப்பே 40 பேர் இறப்புக்கு முக்கிய காரணம்
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்திற்கு மாலை 3 மணிக்கு தொடங்கும் என்று கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். ஆனால் தவெக அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகல் 12 மணிக்கு தொடங்கப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணியில் இருந்து மக்கள் ஒன்று கூடினர்.
ஆனால் தவெக அளித்த மனுவின் படி மாலை 3 மணிக்கு நடிகர் விஜய் பிரசார கூட்டத்திற்கு வரவில்லை. அதற்கு மாறாக இரவு 7.40 மணிக்கு தான் வந்தார். இதனால் பொதுமக்களின் கூட்டம் இருமடங்காக உயர்ந்தது. அப்போது கரூர் மாவட்ட டிஎஸ்பி தவெக நிர்வாகிகளிடம் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு கருதி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நடிகர் விஜய் வாகனத்தை கொண்டு செல்லாமல் 50 மீட்டர் தொலைவில் பேசினால், கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால் தவெக மாநில நிர்வாகிகள் காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். அதன் பிறகு கூட்ட நெரிசலில் நடிகர் விஜய் வாகனத்தை கொண்டு சென்று பிரசாரம் செய்தது தெரியவந்துள்ளது. காவல்துறையின் கோரிக்கையை தவெக மாநில நிர்வாகிகள் கேட்டிருந்தால் 40 பேர் நெரிசலில் சிக்கி இறந்து இருக்கமாட்டார்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரூர் கூட்டத்தில் தவெக மீறிய விதிமுறைகள் பட்டியல் வருமாறு கூட்டத்திற்கான இடம் விதிமுறைகள் மீறல்
* முதலில் கோரிய இடம் (லைட் ஹவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை திடல்) மிக நெரிசல் பகுதி என்பதால் காவல்துறை மறுத்தும், கட்சியினர் அழுத்தம் கொடுத்து அனுமதி பெற முயற்சி செய்தனர்.
* இறுதியில் வேலுசாமிபுரம் இடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட பின்னும், கூட்டம் கூடும் அளவை சரியாக கட்டுப்படுத்தவில்லை.
பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றாதல்
* கூட்டத்திற்கு தேவையான தடுப்பு வேலிகள், அவசர வெளியேறும் வாயில்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை.
* மக்கள் நெரிசலை சீராக வழிநடத்த தன்னார்வலர்கள் போதுமான அளவில் நியமிக்கவில்லை.
* குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருக்கான தனி வசதிகள் செய்யப்படவில்லை.
அதிகப்படியான விளம்பரங்கள்
* நகரில் பல இடங்களில் அனுமதி இல்லாமல் கட்சிக் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் நிறுவப்பட்டன.
கூட்ட அளவீடு தொடர்பான தவறான மதிப்பீடு
* விண்ணப்பத்தில் “10,000 பேர் வருவார்கள்” எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், 25,000 முதல் 27,000 பேர் வரை கூட்டம் கூடியது.
* இதன் மூலம் அனுமதி பெறும்போது தவறான,குறைவான தகவல் அளிக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள் வழங்காதல்
* குடிநீர், முதலுதவி, மருத்துவ அணிவகுப்பு போன்ற வசதிகள் செய்யப்படவில்லை.
* வெயிலில் மக்கள் காலை முதலே காத்திருந்தனர், இதனால் உடல்நல பிரச்னைகள் அதிகரித்தன.
ஆபத்தான நடத்தை
* விஜய்யை காண சிலர் அருகிலிருந்த மரங்களில் ஏறிய நிலையில், கிளைகள் உடைந்து விழுந்ததில் கூட்ட நெரிசல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
* மரக்கிளை விழுந்ததும் கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த நிகழ்வுகளில் நடந்த சம்பவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதல்
* திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய இடங்களில் முன்னரே மூச்சுத்திணறல், மயக்கம், காயங்கள் ஏற்பட்டும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதுபோல் பல்வேறு விதிமீறல்களை தவெகவினர் செய்துள்ளனர். ஆனால் கட்சி நிர்வாகிகள் நடிகர் விஜய் கண்ணில் படும் வகையில் நின்று கொண்டனர். யாரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், போன்ற அத்தியாவசிய உதவிகளை செய்ய முன்வரவில்லை என்ற தவல்களும் விசாரணையின் போது வெளியே வந்துள்ளது.
* தடையை மீறி 24 கி.மீ தூரம் ரோடு ஷோ
நாமக்கல்லில் இருந்து பரமத்தி வேலூர் வழியாக தவுட்டுபாளையம், ேவலாயுதபாளையம், செம்மடை வழியாக சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு தவெக தலைவர் ரோடு ேஷாவாக சென்றார். ஆனால், இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் வந்தனர்.
ஏற்கனவே கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலை முதல் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருந்த நிலையில், பல ஆயிரம் ேபர் திடீரென அங்கு குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முக்கியமாக, விஜய் ரோடு ேஷா நடத்தாமல் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்திருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
* ஒன்றரை வயது மகனை பார்த்து கதறிய மாற்றுத்திறனாளி தாய்
உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தை ஒன்றே முக்கால் வயதே ஆன குரு விஷ்ணு. விஜய் பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்கிறது துரு விக்னேசின் வீடு. குரு விஷ்ணுவின் தாய் சரியாக வாய் பேச முடியாத மாற்றத்திறனாளி. அடுத்த மாதம் குரு விஷ்ணுவிற்கு பிறந்த நாள்...
கண்ணாடி பெட்டிக்குள் சடலமாக வைக்கப்பட்டிருந்த தனது குழந்தையை அந்த தாய் பார்த்து கதறியது நெஞ்சை உலுக்கியது. அருகில் அமர்ந்திருந்த குரு விஷ்ணுவின் பாட்டி... உன் அப்பா அடிச்சா கூட நான் விடமாட்டேனே... இப்ப உன்ன இப்படி விட்டுட்டேனே... ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவன் குழந்தையை எடுத்திட்டடு போயிட்டானே.. அவன் நல்லாவே இருக்க மாட்டான்.. என கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
* மக்கள் சரிந்து விழுந்ததை கண்டு கொள்ளாத நிர்வாகிகள் ஒரு மணி நேரம் பயணத்தை 5 மணி நேரம் ஆக்கியது ஏன்?கூட்டத்தை கூட்ட புஸ்ஸி ஆனந்த் போட்ட பிளான்
நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொள்ள வந்த விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு நேற்றுமுன்தினம் காலை 9.30 மணியளவில் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் சென்றார். நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தியேட்டர் பகுதிக்கு மதியம் 2.45 மணிக்கு வந்தார். 15 நிமிடத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூருக்கு புறப்பட்டார்.
நாமக்கல்லில் இருந்து கரூருக்கு சுமார் 37 கிலோ மீட்டர் தூரம் தான். விஜய் நினைத்திருந்தால், அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்குள் கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்திருக்கலாம். ஆனால், 4.30 மணி நேரம் தாமதமாக இரவு 7.20 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தார்.
முன்னதாக, கூட்டத்தை அதிகளவு காண்பிக்க வேண்டும் என்பதற்காக திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் பேரை திரட்டியுள்ளனர். இதற்கான வேலையில் புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பரமத்தி வேலூர் எல்லைப்பகுதியில் சுமார் 3 ஆயிரம் பேர் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, 3 ஆயிரம் பேர் அங்கிருந்து வேலுச்சாமிபுரத்தை நோக்கி வாகனங்களில் வந்தனர். வரும் வழியில் வேலுச்சாமிபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செம்மடையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, அவர்களும் வேலுச்சாமிபுரம் நோக்கி சென்றனர். ஏற்கனவே காலை 10 மணி முதல் வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
குடிக்க தண்ணீர் வசதி கூட இல்லாமல், மயங்கி விழுந்தனர். பரமத்தி வேலூர், ெசம்மடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தவர்கள் திடீரென வேலுச்சாமிபுரத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஆரம்பித்தது. இதை கவனித்த விஜய் கூட்ட நெரிசலை பொருட்படுத்தாமல் இரவு 7.25 மணிக்கு பேச ஆரம்பித்தார். முன்னதாக, விஜய் பேசுவதற்கு முன்னரே 3 பேர் இறந்துள்ளனர்.
இதை புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். விஜய் தொடர்ந்து பேச கூட்ட நெரிசலால் மூச்சு திணறி ஒவ்வொருவராக இறந்துள்ளனர். விஜய் நினைத்திருந்தால், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் பேச்சை நிறுத்தி விட்டு மைக் மூலம் ரசிர்களுக்கு ஒரே இடத்தில் கூட வேண்டாம் என அறிவுரை வழங்கியிருக்கலாம். ஆனால், அதையும் அவர் செய்யவில்லை.
சுமார் 15 நிமிடத்தில் பரப்புரையை முடித்து விட்டு இரவு 7.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்ற விஜய், பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் இரவு 9.45 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றார். நாமக்கல்லில் இருந்து கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம் வருவதற்கு முன்பு திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதிக்கு விஜய் வந்தார். அங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் தான் வேலுச்சாமிபுரம் பஸ் நிறுத்தம்.
500 மீட்டர் தூரத்தை விஜய் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடந்து வந்தார். திருகாம்புலியூர் ரவுண்டானா பகுதியில் இருந்து கூட்ட நெரிசல் ஆரம்பிக்க துவங்கியது. இதை பார்த்து விட்டு, கையை அசைத்து கொண்டே விஜய் வந்தார். விஜய்யின் தாமதமே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம். முக்கியமாக, திருச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்டது.
ஆனாலும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார் அதை பற்றி துளியளவு கூட கவலைப்படவில்லை. சமூக வலைதளங்களில் தங்களுக்கு அதிகளவு மாஸ் உள்ளதை காட்டி கொள்வதில் விஜய், புஸ்ஸி ஆனந்த் தரப்பினர் தீவிரமாக இருந்தனர். திருச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இருந்தால், கரூர் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள் தொிவித்துள்ளனர்.
* மனைவி, 2 மகள்களை இழந்தவர் கதறல்
கரூரில் விஜய் பிரசாரத்திற்கு வந்த போது அவரை காணும் ஆவலில், விஸ்நாதபுரியை சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவர் தனது மனைவி ஹேமலதா(28), மகள்கள் சாய் லெட்சனா(8), சாய் ஜீவா(4) ஆகியோருடன் காலை முதலே வேலுச்சாமிபுரத்தில் வந்து காத்து கிடந்து உள்ளார். விஜய் வந்து பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆனந்த ஜோதி தனது குடும்பத்தாருடன் சிக்கிக் கொண்டார்.
இதில் ஹேமலதா, சாய் லெட்சனா, சாய் ஜீவா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தனது குடும்பத்தை அழைத்து வந்த ஆனந்த ஜோதி, குடும்பத்தினரை தொலைத்து விட்டு இப்போது தனிமரமாக கதறியது பரிதாபமாக இருந்தது.
* ஜெயலலிதா பங்கேற்ற மகாமகத்தில் பலி 50: விஜய் பிரசாரத்தில் பலியானது 40
கும்பகோணம் நகரில் அமைந்துள்ள மகாமகக் குளத்தில் 1992 பிப்ரவரி 18 அன்று நடந்த மகாமகத் திருவிழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு குளத்தில் நீராடினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் பலியாகினர். மேலும், 74 பேர் காயமடைந்தனர். ஒரு அரசியல் கட்சி தலைவர் பங்கேற்ற விழாவில் நடந்த அதிகபட்ச உயிரிழப்பு அதுதான். அதற்குப்பிறகு தற்போது கரூரில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
* கரூரில் கடைகள் அடைப்பு
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் நேற்று கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா அறிவித்தார். அதன்படி ஜவஹர் பஜார், கடைவீதி, வடிவேல் நகர், செங்குந்தபுரம், ராமகிருஷ்ணாபுரம், திருவிக சாலை, திண்டுக்கல் ரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் நகை கடைகள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
* நகைகளை தேடிய பெண்கள்
கரூரில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த தள்ளுமுள்ளுவில் பல பெண்கள், தங்களது நகைகளை பறிகொடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை விஜய் பிரசாரம் நடந்த இடத்துக்கு வந்து தாங்கள் தொலைத்த நகைகளை 2 பெண்கள் தேடி கொண்டிருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ஒரு பெண் தோடு, மற்றொரு பெண் செயினை பறி கொடுத்தது தெரியவந்தது.
* ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கிய தவெகவினர்
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கார்த்திக், மாதேஸ் அளித்த பேட்டி,‘‘ அவசரம் என்று எங்களை வர சொன்னார்கள். வந்தால் வரும் வழியில் எங்களை வழிமறித்து ஆம்புலன்சையும் எங்களையும் தவெகவினர் தாக்கினர். சாவியை பறித்து கொண்டனர். இதில் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் தடுத்தும் எங்களை தவெகவினர் தாக்கினர். ஆம்புலன்ஸ்சை தாக்கியதாக ஒரு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
எங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சை 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து இங்கு வந்தால் கண்ணாடியை உடைக்கின்றனர். அவர்களின் கட்சியை கேவலப்படுத்துகிறோம் என்று தாக்கினர். அவ்வளவு அடி வாங்கினாலும் நாங்கள் உயிரை காப்பாற்றதான் போராடினோம். பணத்திற்காக நாங்கள் வரவில்லை. இலவசமாகத்தான் வந்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
* மின் தடை ஏற்படுத்தியதே தவெக ரசிகர்கள்தான்
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது, மின்தடை செய்யப்பட்டதாக கட்சியினர் புகார் கூறியுள்ளனர். உண்மையில் விஜய் பிரசார பஸ் நின்றிருந்த இடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்கள் பக்கம் இருந்த தகடு தடுப்புகளை ரசிகர்களும் தொண்டர்களும் உடைந்து கொண்டு சென்றதால், அங்கிருந்த போகஸ் லைட்டுகளும் உடைந்தது. இதனால்தான் மின்தடை சிறிது நேரம் ஏற்பட்டுள்ளது அதைத் தவிர விஜய் பேசும்போது மின் தடை செய்யப்படவில்லை என்பது அப்பகுதியி்ல இருந்த தெரு விளக்குகள் அனைத்தும் எரிந்ததன் மூலம் உறுதியாகி உள்ளது.
* பஸ்சுல ஷட்டர இறக்கி விட்டுட்டாரு...
இந்த துயர சம்பவத்திற்கு பல காரணங்கள் கூறப்படும் நிலையில் கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறியதாவது: முனியப்பன் கோயிலில் இருந்து விஜய் வரும்போதே பஸ்சுல இருந்த ஷட்டரை இறக்கிவிட்டுட்டாரு. மக்கள பார்த்து கைய ஆட்டக்கூடிய ஷட்டரை விஜய் இறக்கி விட்டுட்டாரு. அதனால விஜய பார்க்க முடியாம மக்கள் திடு திடுன்னு நெருக்கலா வந்துட்டாங்க.
அதான் நெரிசலுக்கு காரணம். அதோட இவங்க தட்டி அடச்சது வந்து ஒரு பத்தடி தள்ளி அடச்சிருக்கனும். அப்படி செஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் ஆயிரம் பேராவது நின்னிருப்பாங்க. போன தடவ எடப்பாடி கூட்டத்திற்கு ஊனின இடத்திலேயே ஊனிட்டாங்க. கூட்டம் வரும்னு தெரியும். அதுக்கு தகுந்த மாதிரி மெயிண்டய்ன் பன்னல...அந்த நெருக்கல்ல தான் இப்படி நடந்துருச்சு... என்றார்.
* தலைகாட்டாத தவெகவினர்
விஜய்யின் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் இறந்தனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கரூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆனால், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் கரூருக்கு வரவில்லை என்பது தான் வேதனையின் உச்சகட்டம். உள்ளூரை சேர்ந்த நிர்வாகிகள் கூட வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தவெகவினர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். குறிப்பாக, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
* விஜய்யை காணவில்லை....
கரூரே மரண ஓலம் கேட்டு கொண்டிருந்த நிலையில், விஜய் கரூரில் இருந்து திருச்சி சென்று தனி விமானம் மூலம், சென்னைக்கு சென்று வீட்டிற்கு போய் விட்டார். இது தொடர்பாக வலைதளங்களில் விஜய்யை காணவில்லை என்ற போஸ்டர் நேற்று முன்தினம் இரவு தொடங்கி வைரலாகி வருகிறது.
* விஜய்தான் முழு காரணம்: மக்கள் கொதிப்பு
கரூர் பொதுமக்கள் கூறுகையில்,‘‘தவெக தலைவர் விஜய்யை யாரும் தலைவராக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ரசிகர்களாக பார்ப்பதற்கு தான் பெண்கள் உட்பட பலர் சென்றுள்ளனர். உங்களுக்கு பார்க்க வேண்டும் என்று விருப்பமாக இருந்தால் டிவியில் பாருங்கள். எனது தனிப்பட்ட கருத்து. கூட்டத்தை சரியாக வழிநடத்த தெரியவில்லை. மரத்திலிருந்து விழுந்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒருவரை காப்பாற்ற ஒருவர் காப்பாற்ற முயன்றதால்தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டு இருந்தால் இன்னும் பலரை காப்பாற்றி இருக்கலாம். முறையான கட்டமைப்பு இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பைபாஸில் இருந்து விஜய் வாகனத்தை தொடர்ந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். விஜய் வந்தவுடன் வாகனம் உள்ளே உட்கார்ந்து இருந்தார். வெளியில் வந்து பார்த்திருந்தால் பாதி மக்கள் கலைந்து சென்றிருப்பார்கள். ஏழு மணிக்கு வந்ததும் ஒரு காரணம்.
ஆம்புலன்ஸ் வந்தபோது அதை தவெகவினர் ஏன் உள்ளே வந்தே எனக்கேட்டு அடித்தனர். ஆம்புலன்ஸ் செல்ல வழி விட்டு இருந்தால் இன்னும் பலரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். விஜய் பாதியிலேயே இறங்கும் போதே ஏதோ நடக்கப்போகுதுன்னு எங்களுக்கே தெரிஞ்சி போச்சு... ஏதோ நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சி போயிதான் உடனே கிளம்பிட்டாரு.. இதுக்கு முழுக்க விஜய் மட்டும் தான் காரணம். விஜய் மட்டும் தான் முழு பொறுப்பு ஏத்துக்கனும். அடிப்படை வசதி எதுவும் செய்யல... ஒரு தண்ணி கேன் கூட குடுக்கல...’’ என்றனர்.
* திக்... திக்... திக்... நிமிடங்கள்
சம்பவம் நடந்த இடத்தின் அருகே வசிப்பவர்கள் கூறுகையில்,‘‘ காலை 10 மணியில் இருந்தே பொதுமக்களும், சிறுவர்களும் வந்தனர். குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். காவல்துறையையும் குறை சொல்ல முடியாது. அனைத்து இடத்திலுமே கூட்டம் இருக்கும்போது கொஞ்சம் ஓரங்கட்டி போங்க அப்படின்னு சொன்னார்கள். கூட்டம் அதிகரிச்சது. 12 மணிக்கு ஒரு கட்சித் தலைவர் வருகிறார் என்றார்.
அதற்கு குறிப்பிட்ட திட்டமிடுதல் இருக்க வேண்டும். 2 மணிக்கு கட்சித் தலைவர் அந்த திட்டமிடுதலோட வந்திருந்தால் எந்த குழந்தையும் பாதிப்பு அடைந்து இருக்காது. வெயில்ல குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஒரே இடத்தில் அவங்க நின்னுகிட்டு ஆட்டம் பாட்டத்தோட இருக்கும் போது அவங்க எனர்ஜி வேஸ்ட் ஆயிடுச்சு. வெயிலின் தாக்கம் அதிகமா இருக்கிறதுனால அவங்க சாப்பிட போக முடியல.
கட்சித் தலைவரை பார்க்கிறது ஒரு சந்தோஷத்துல யாரும் சாப்பிடாம விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் வந்து இங்க கூட்டம் நடத்தும் போது ஒரு சரியான திட்டமிடுதல் எதுவுமே இல்ல. ஒரு பெரிய திட்டமிடுதல் இல்லை. சரியான நேரத்திற்கு வந்திருந்தாங்கன்னா அசம்பாவிதம் நடந்திருக்காது. முக்கியமான காரணம் இந்த பிஞ்சு குழந்தைகள் இறந்ததற்கும் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்ததற்கு முக்கிய காரணம் இவங்க காலதாமதமாக வந்து மக்களை சந்தித்ததுதான்.
ஒரு கட்டுப்பாட்டோடு கட்சி தலைவரை பார்க்க செல்ல வேண்டும். உங்களின் பெற்றோரையும் நினைத்து பாருங்கள். இந்த மாதிரி ஒரு கட்சி தலைவரை பார்க்க வந்து இப்ப கரூர் மாவட்டமே ஒரு அவல நிலைக்கு வந்துள்ளது. எத்தனை பேர் இறந்திருக்காங்க அதை நினைக்கும் போது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு.
உயிரிழப்பு என்பது சாதாரண விஷயம் கிடையாது அதனால தயவு செய்து இனிமேல் எந்த கட்சித் தலைவர்களா இருந்தாலும் திட்டமிடுதலோடு சரியான முறைப்படி சென்று மக்களுக்கு தேவையான ஒரு விஷயங்களை சொல்லி இந்த நேரத்திற்குள் செல்ல வேண்டும். உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கலாம். கரூரில் நடந்த இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடக்க கூடாது’’ என்றனர்.
* உயிரிழப்பிற்கு தண்ணீர் பாட்டிலே காரணம்?
கரூர் கூட்டத்தில் ஒரு பெண் மயக்கமடையவே, கூட்டத்தினர் தண்ணீர் கேட்டனர். உடனடியாக விஜய் பிரச்சார வேனில் இருந்தவர்களிடம் இருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கி கூட்டத்தினரை நோக்கி வீசினார். இதனையடுத்து கூட்டத்தினர் தண்ணீர் பாட்டில் கேட்டு கூச்சலிட, ஆதவ் அர்ஜூனா தண்ணீர் பாட்டில்களை கூட்டத்தினரை நோக்கி வீசினார். இதனை பிடிக்க கூட்டத்தினர் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்தான் பலர் கீழே விழுந்தது உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
* 7 மணி நேரம் பிரேத பரிசோதனை
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அதன் பின்னர் போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு ஒப்படைக்கும் பணி நேற்று துரித கதியில் நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவமனையில் அனைத்து உடல்களும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு கொண்டே இருந்தது.
இவ்வாறு பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய 7 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 அரசு அமரர் ஊர்தி வாயிலாக உடல்கள் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
* உயிர் தப்பியது எப்படி?
உயிர் தப்பிய சிறுமி கூறுகையில், ‘‘அனைவரும் பசங்கதான். கூட்ட நெரிசலில் கீழே விழுந்து விட்டேன். இருப்பினும் யாரும் கவனிக்காமல் என் மீது ஏறி நின்னாங்க. மூச்சே விட முடியவில்லை. அப்போது ஒருவர் என்னை காப்பாற்றி இங்கு வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். என் தங்கையையும் மிதித்து விட்டார்கள். கரூரில் தான் இப்படி நடந்துள்ளது,’‘என்றார்.
* நிச்சயதார்த்த ஜோடி பலியான சோகம்
கடந்த சில தினங்களுக்கு முன் ஆகாஷ் (24) என்பவருக்கும், கோகுலஸ்ரீ (24) என்பவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவரும் கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இறந்த மகனின் உடலை பார்த்து ஆகாஷ் தாய் கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது. உயிரிழந்த கோகுலஸ்ரீயின் தாய் கதறி அழுதபடி கூறியதாவது: ஆசை ஆசையாய் வளர்த்த என் மகள் காலேஜ்ல புரபசரா இருந்தா. நான் போகாதீங்கன்னு எவ்வளவோ சொன்னேன். அங்க போன என் மகளை கொன்னுட்டாங்களே... கல்யாண ஜோடியா ஆக வேண்டியவங்க.. கருமாதி ஜோடி ஆகிட்டாங்களே... என கதறி அழுதார்.
* 40 பேரை காவு வாங்கிய 25 நிமிடம்
நாமக்கல்லில் இருந்து கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு விஜய் நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு வந்தார். தொடர்ந்து, சுமார் 10 நிமிடம் விஜய் பேசினார். பின்னர், இரவு 7.45 மணிக்கு வேலுச்சாமிபுரத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்பினார். வேலுச்சாமிபுரத்தில் சுமார் ‘25 நிமிடம் மட்டும்’ தான் விஜய் இருந்துள்ளார்.
* தாய், மகள் சாவு
கூட்ட நெரிசலில் சிக்கி பிரியதர்ஷினி (35), இவரது மகள் தரணிகா (14) இறந்தனர். இது குறித்து அவரது கணவர் கூறுகையில்,‘‘விஜய்யை பார்த்துவிட்டு வருகிறேன் என என் மனைவியும் மகளும் சொல்லிவிட்டு சென்றனர். போன் செய்தபோது எடுத்து விஜய்யை பார்த்துவிட்டு வருகிறோம் என்று கூறினர். ஆனால் விஜய் வந்து வெகுநேரமாகியும் நான் போன் செய்தும் எடுக்கவில்லை.
திரும்பவும் போன் செய்த போது ஒரு போலீசார் எடுத்து போனை விட்டு விட்டு சென்றுள்ளனர். கூட்ட நெரிசலில் பலரும் சிக்கி விட்டனர். மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று தெரிவித்தார். பிறகு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது என் குழந்தை இறந்து கிடந்தாள். மனைவியாவது இருப்பாள் என நினைத்தேன், ஆனால் இறந்துவிட்டார்’’ என்று கூறி மனைவியையும், மகளையும் இழந்த அவர் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
* ஐகோர்ட் கிளை இன்று விசாரணை
தவெக தலைவர் விஜய் கரூரில் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சென்னையில் ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி இல்லத்திற்கு தவெக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் நிர்மல்குமார் உள்ளிட்டோர் நேற்று சென்றனர். இவர்கள் நீதிபதியிடம் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இதில், சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும், சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இம்மனு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்ததாக தவெக நிர்வாகிகள் கூறினர்.
* விஜய் நோக்கி வந்த செருப்பு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது முதல் ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் புகுந்து செல்ல முயன்றது. அப்போது தனது பேச்சை நிறுத்திய விஜய் ஆம்புலன்ஸ்க்கு செல்ல வழிவிட கூறினார். அவர் பேசி கொண்டிருந்த போதே, அவரின் பின்புறம் இருந்து செருப்பு ஒன்று விஜய்யை நோக்கி கூட்டத்தில் இருந்து வீசப்பட்டது. இதனை கவனித்த பாக்சர்கள், அந்த செருப்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த செருப்பு பாக்சரின் கையில் பட்டு கீழே விழுந்தது. இதனால் விஜய் செருப்பு வீச்சிலிருந்து தப்பித்தார்.