கரூர் நெரிசலுக்கான காரணத்தை ஆராய ஹேமமாலினி எம்பி தலைமையில் 8 பேர் கொண்ட எம்பிக்கள் குழு: பாஜ தேசிய தலைவர் நட்டா அறிவிப்பு
சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்பிக்கள் குழுவை பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜ தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பு: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கரூரில் தமிழக வெற்றிக்கழகம் பிரசாத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழுவை கரூர் சென்று, இந்த சம்பவத்திற்கு காரணமான சூழ்நிலைகளை ஆராயவும், இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அதன் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஹேமமாலினி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் எம்பிக்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா ஷர்மா, புத்த மகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.