கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் 11 நாட்களுக்கு பின் வீடியோ காலில் பேசிய விஜய்: ‘விரைவில் உங்களை சந்திக்க வருவேன்’ என ஆறுதல்
கரூர்: கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் 11 நாட்களுக்கு பின் வீடியோ காலில் ஆறுதல் கூறிய விஜய், ‘விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்’ என கூறியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம்தேதி இரவு 7 மணியளவில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, விஜய் அவசர அவசரமாக தான் வந்த சொகுசு பிரசார பஸ்சில் கரூரில் இருந்து இரண்டு கார்கள் மாறி திருச்சி விமான நிலையம் சென்றார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை சென்றார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட திமுக செயலாளர் செந்தில்பாலாஜி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன் ஆகியோர் அரசு மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற நள்ளிரவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 3 மணியளவில் கரூர் அரசு மருத்துவமனை சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தும், சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண தொகையையும் அறிவித்து சென்றார்.
தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி சென்றனர். ஆனால் தவெக நிர்வாகிகள் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை. விஜய் நேரில் வந்து பார்க்காததும், ஆறுதல் கூறாததும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பின்னர் விஜய் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில், கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்குவதாக எண்ணுகிறேன் என கூறியவர், விரைவில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதாக கூறினார்.
இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் ரோடுஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், ‘கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியானதற்கு வேதனை தெரிவித்து, தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை நடுரோட்டில் விட்டு சென்ற விஜய்க்கு தலைமை பண்பே இல்லை. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, அவர்களது கட்சி நிர்வாகிகள் களத்தில் உதவி செய்து உள்ளனர். ஆனால், தவெக கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட அங்கு இல்லை.
இது என்ன மாதிரியான கட்சி’ என காட்டமான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதேநேரத்தில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர்கள் தலைமறைவாக உள்ளனர். தவெக தேர்தல் பிரசார பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டை விட்டு ஓடி டெல்லியில் உள்ளார். தவெக தலைவர் விஜய் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளார். தவெகவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், 7 நாட்களுக்கு பின் பெயரளவுக்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சில நிர்வாகிகள், பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த சூழலில், சம்பவம் நடந்து 11 நாட்களுக்கு பின்னர், சென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் 5க்கும் மேற்பட்டோர் ஒரு காரில் கரூர் வந்தனர். பின்னர் உள்ளூர் தவெக நிர்வாகிகளுடன் சேர்ந்து நேற்றுமுன்தினம் இரவு மற்றும் நேற்று காலையில் ஏமூர் புதூர் மற்றும் வடக்கு காந்திகிராமம் போன்ற பகுதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, விஜய் உங்களிடம் வீடியோ காலில் பேச விரும்புகிறார் எனக்கூறி தங்களின் செல்போனில் விஜய்க்கு வீடியோ கால் செய்து கொடுத்து பேச வைத்தனர். நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை வரை 10க்கும் மேற்பட்டோர்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.
ஏமூர் புதூரில் மனைவி மற்றும் மகளை இழந்த சக்திவேல் என்பவரிடம் வாட்ஸ்அப் வீடியோ காலில் விஜய் பேசும் போது, ‘இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன், விரைவில் உங்களை வந்து நேரில் சந்திப்பேன்’ என ஒரு நிமிடம் பேசியுள்ளார். இதேபோல், காந்திகிராமத்தில் வசிக்கும் தனுஷ்குமாரின் தாயார் மற்றும் உறவினர்களிடம், ‘நான் உங்களுக்கு சகோதரனாக இருந்து எல்லா உதவியும் செய்வேன், தைரியமாக இருங்கள், விரைவில உங்களை சந்திப்பேன்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ கால் சந்திப்பின் போது யாரும் புகைப்படங்கள், வீடியோ எடுக்க வேண்டாம் என விஜய் கேட்டு கொண்டதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
* கரூரில் விசாரணை தீவிரம் இன்ஸ்பெக்டர் குழு ஆய்வு: செருப்புகள் அகற்றம்
41 பேர் பலி தொடர்பாக கரூர் பயணியர் மாளிகைக்கு 3வது நாளாக நேற்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து எஸ்ஐடி குழு ஐஜி அஸ்ரா கார்க்யை நேரில் சந்தித்து தங்களிடம் உள்ள ஆவணங்களை வழங்கினர். குழுவில் உள்ள நாமக்கல் எஸ்பி விமலா, சிவில் சப்ளை சிஐடி எஸ்பி ஷியாமளா தேவி ஆகியோர் தலைமையிலான குழுவினர் தனித்தனி வாகனத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சம்பவம் தொடர்பான ஆவணங்களை சேகரித்தும், தொடர்புடைய அதிகாரிகளை நேரில் சந்தித்தும், அது குறித்தான தகவல்களுடன் நேற்று மாலை பயணியர் மாளிகை வந்து ஐஜியிடம் ஆவணங்களை ஒப்படைத்தனர். பின்னர் நேற்று மாலை 6 மணியளவில் குழுவில் உள்ள 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 8 பேர் கொண்ட குழுவினர், வேலுச்சாமிபுரம் பகுதிக்கு மீண்டும் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வுக்கு பின்னர், கடந்த 10 நாட்களாக அங்கு ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த செருப்புகளை நேற்று மாலை மாநகராட்சி பணியாளர்கள் சேகரித்து வேனில் ஏற்றி சென்றனர்.