கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் இருந்து தப்பிக்க டெல்லி விரைந்த விஜய் கட்சி நிர்வாகி: பா.ஜ தலைவர்களை சந்திக்க தனிவிமானத்தில் பயணம்
சென்னை: பாஜ தலைவர்களை டெல்லியில் சந்திக்கவும், 41 பேர் பலியான சம்பவத்தில் காப்பாற்றும்படியும் கேட்பதற்காக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்று முகாமிட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரூரில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வரவேண்டிய நடிகர் விஜய், 7 மணிக்கு மேல் தாமதமாக வந்தார். இதனால், அவரை காண கூட்டம் அதிகமானது. சுமார் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறிவிட்டு, தற்போது 28 ஆயிரம் பேர் வரை கூடியிருக்கும் தகவல்கள் வெளியானது.
இதனால், கட்டுக்கடங்காத கூட்டம் அதிகமாக இருந்தாலும், அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நடிகர் விஜய் விடாப்பிடியாக சென்றதாலும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதற்காகவும், விதிகளை மீறியதற்காகவும், 41 பேர் பலியாக காரணமாக இருந்ததற்காகவும், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரத்தில் சென்னை சைபர் க்ரைம் போலீசார், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் மீது போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அதேநேரத்தில், தினமும் காலையில் பனையூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு, பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு வருகிறார். மாலையில்தான் செல்கிறார். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஜான் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட சிலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், சம்பவம் நடந்து போலீசார் விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில், தவெக நிர்வாகியும், நடிகர் விஜய்க்கு நெருக்கமானவருமான ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு திடீரென டெல்லிக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் தான் பொறுப்பாளராக உள்ள கூடைப்பந்து விளையாட்டு தொடர்பாக ஆலோசனை நடத்த செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், டெல்லியில் எந்த ஒரு ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லியில் பாஜ மூத்த தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை அவர் ரகசியமாக சந்தித்து, 41 பேர் பலியான சம்பவத்தில் மொத்த ஆதாரமும் தங்களுக்கு எதிராக உள்ளதால், தங்களை காப்பாற்றும்படி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா சந்திப்புக்கு தமிழகத்தில் உள்ள முன்னாள் மாநில தலைவர் ஒருவரும், பெங்களூரு எம்பியுமான ஒருவரும் சேர்ந்து இந்த ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
* கரூரில் கடந்த சனிக்கிழமை நடிகர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
* விதிகளை மீறியதற்காக தவெக கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
* தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
* கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.