Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் அரசு சரியாக செயல்பட்டது விஜய்யை கைது செய்ய பல நெருக்கடி வந்தும் முதல்வர் பெருந்தன்மையோடு கையாண்டார்

* டிடிவி.தினகரன் பாராட்டு, அதிமுக போல் பாஜவும் இதில் அரசியல் செய்கிறது என குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் அரசு சரியாக செயல்பட்டது. விஜய்யை கைது செய்ய பல நெருக்கடி வந்தும், முதல்வர் பெருந்தன்மையோடு கையாண்டார். அதிமுக போல் பாஜவும் இதில் அரசியல் செய்கிறது என்று டிடிவி.தினகரன் தெரிவித்து உள்ளர். தஞ்சாவூரில் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கரூர் துயர சம்பவத்தில் தமிழ்நாடு முதல்வர் பொறுப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசாக இருக்கட்டும், காவல்துறையாக இருக்கட்டும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தான் நான் நினைக்கிறேன்.

முதலமைச்சருக்கு யாரையும் கைது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் இருப்பதாக முதல் நாளில் இருந்தே தெரியவில்லை. ஆணையத்தின் அறிக்கை வந்த பின்பு தான் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 41 உயிர்கள் அநியாயமாக பலியான நிலையில் எப்ஐஆர் போட வேண்டிய அவசியம் உள்ளது. கைதுகள் செய்ய வேண்டிய அவசியமும் அரசாங்கத்துக்கு உள்ளது. ஏதோ நான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என்று இல்லை. நடக்கிறதை நியூட்ரலாக பார்க்கும்போது ஒரு குடிமகனாக பார்க்கும்போது எல்லாம் சரியாக தான் நடக்கிறது.

தவெக இதை திட்டமிட்டு செய்யவில்லை. இது ஒரு விபத்து தான். முதல்வர் சொன்னது போல் கட்சி நிர்வாகிகளோ தொண்டர்களோ இறப்பதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் தார்மீக பொறுப்பேற்று இருந்தால் நீதிமன்றம் கூட அவர் மீது இவ்வளவு கண்டனங்களை தெரிவித்து இருக்காது. பொறுப்பு ஏற்று இருந்தால் ஒருவேளை பழி நம் மீது வந்து விடுமோ என ஆலோசகர்களோ அல்லது வழக்கறிஞரோ சொன்னதனால் அவர் அப்படி பேசி இருப்பாரோ என நான் நினைக்கிறேன். தார்மீக பொறுப்பு தவெகவுக்கு தான் இருக்கு.

இந்த விவகாரத்தில் சீமான் ரொம்ப சரியாக பேசி இருக்கிறார். வழக்கம் போல அண்ணன் பழனிசாமி அந்த பதவி வெறியில் ருசி கண்டவர், இதற்கு ஆளுங்கட்சி தான் காரணம். இதில் சதி இருப்பது போல பேசிக்கொண்டு இருக்கிறார். ஆடு நனையுது என்று ஓநாய் அழுவது போல் தவெகவிற்காக இவர் வக்கீலை போல் வாதம் இட்டு இருக்கிறார். நம்ம ஊரில் சொல்லுவார்கள். வீடு பத்திக்கிட்டு எரியிறப்ப சுருட்டுக்கு நெருப்பு கேட்ட மாதிரி அவர் கூட்டணி கணக்கை எல்லாம் பேசி வருகிறார்.

இப்போது விஜய் கூட்டணி பற்றி பேசுகிற மனநிலையில் இருப்பாரா?. ஆனால், பழனிசாமி ஊர் ஊரா போய் கூவுவதை பார்த்தால் அவரை கூட்டணிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என பழனிசாமி தலைகீழ் நின்றாலும் இந்த முறை அவரை வீழ்த்தாமல் அமமுக ஓயாது. தமிழ்நாடு முழுவதும் எங்கள் தொண்டர்கள் அவருடைய ஓநாய் வேஷத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

துரோகத்திற்கு பெயர் பெற்றவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட போது, அங்கு செல்லாமல் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் முதலமைச்சர் உடனே சென்று விட்டார். இன்றைக்கு கூட நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை.

ஆனால் சில கட்சித் தலைவர்கள் இந்த விஷயத்தில் அரசியல் ஆக்குவதை அந்த குடும்பங்கள் தொலைக்காட்சி, பத்திரிகையில் பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள்.

நம் வீட்டில் எழவு விழுந்திருக்கு நம்மளை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று எண்ணுகிற அளவிற்கு மிக மோசமான நிலையில் சில அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். இதில் என்ன சதி இருந்திட முடியும். திட்டமிட்ட சதியோ எதுவும் இருக்காது. இதை வைத்துக் கொண்டு சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நிதி அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த இணை அமைச்சர் முருகன் வந்தது பிரதமர் அனுப்பியதுதான்.

அவர்கள் ஒன்றும் மற்றவர்கள் போல் இல்லை. சரியாகத்தான் பேசி விட்டு சென்றார்கள். பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு குழு வந்தது. பழனிசாமிக்கு இணையாக பாஜவும் அரசியல் செய்வது உண்மையில் வருத்தம் அளிக்கிறது.  தூத்துக்குடி சம்பவத்தின் போது எந்த குழுவும் வரவில்லை. குழுவில் வந்தவர்களே கும்பமேளாவில் என்ன கருத்து சொன்னார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் தயவு செய்து இந்த கொடிய துயரத்தை மரணத்தை அரசியல் ஆக்க வேண்டாம்.

விஜய் புதியவர் தானே. அண்ணாமலை கரூர் சம்பவத்தில் பேசியது கூட எனக்கு வருத்தம் அளிக்கிறது. தொண்டர்கள் மேல் கை வைக்காதீர்கள் என விஜய் வெளியிட்ட வீடியோ, அது அவருடைய அனுபவமின்மையைத்தான் காட்டுகிறது. முதல்வர் அதை பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டு போய்விட்டார். திருமாவளவன் வலியவர்களுக்கு ஒரு நீதி, எளியவர்களுக்கு ஒரு நீதி என பேசியபோது கூட நிதானமாக இருந்திருக்கிறார். நிறைய பத்திரிகையாளர்கள் அவருக்கு பிரஷர் கொடுத்தாலும் சரி, நீதிமன்றம் என்ன நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறீர்கள் என்று கேட்ட போது கூட நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு கூட உடனே போய் கைது செய்திருக்கலாம்.

ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா எங்கு இருக்கிறார்கள் என்று கூட காவல்துறைக்கு தெரியாமலா இருக்கும். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் கூட சென்று பெயில் எடுக்கட்டும் எனவும் இருந்திருக்கலாம். பழனிசாமி சொன்னது மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா எவ்வளவு பெரிய ரிப்யுடேட் ஆபிசர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவங்க இதில் வந்து உட்கார்ந்து விளக்கம் கொடுக்கிறார்கள் என்றால் தவறு நடக்காதது தான்.

அது மாதிரி அடிஷனல் டிஜிபி டேவிட்சன் எல்லாருக்கும் தெரியும். எந்த ஆட்சி இருந்தாலும் அவர்கள் எல்லாம் முக்கியமான பொறுப்பில் தான் இருப்பார்கள். கரூரில் நடந்ததால் முன்னாள் அமைச்சர் ஒருவரை குறை சொல்கிறார்கள். நாமக்கலில் நடந்திருந்தால் யாரை சொல்லி இருக்க முடியும். அவர்கள் புதியவர்கள். அரசியலுக்கு புதியவர்கள். இதை துணிச்சலாக எதிர் கொள்ள வேண்டும்.

மடியில கனமில்லை என்றால் இதை துணிச்சலாக எதிர்கொள்ளலாம். திசை திருப்புவது போல் அவர்கள் பேசியதுதான் நீதிமன்றம் அப்படி கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்குது. முதலமைச்சரே சிபிஐக்கு ஆடர் போடலாம். தற்போது நீதிமன்றம் எஸ்.ஐ.டி போட்டு உள்ளது. வருங்காலத்தில் இதுபோல் இலலாமல் அனைத்து கட்சிகளும் சேர்ந்து சரியான திட்டமிடுதல் தேவை என்று முதலமைச்சர் கிளியராக சொல்லியுள்ளார். திரும்பத் திரும்ப இதையே பேசிக்கொண்டு இருக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

* செந்தில் பாலாஜி கிளியரா சொன்னாரு...

‘செந்தில் பாலாஜி கிளியராக பேட்டி கொடுத்துள்ளார். அதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன் எங்க கட்சியில் இருந்தவர் தான் என் பழைய நண்பர் தான். இப்போது திமுகவில் உள்ளார். அதற்காக காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்க கூடாது. எனக்கு அவர் 2006ல் இருந்து நல்ல பழக்கம் தான். இது மாதிரியான கொடூர புத்தி எல்லாம் இருக்காது. பழனிசாமி எப்படி தரம் தாழ்ந்து போயிருக்கிறார் என்பதுதான் நமக்கெல்லாம் வருத்தத்தை அளிக்கிறது’ என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

* விஜய் தார்மீக பொறுப்பேற்று இருந்தால் நீதிமன்றம் கூட அவர் மீது இவ்வளவு கண்டனங்களை தெரிவித்து இருக்காது.

* வீடு பத்திக்கிட்டு எரியிறப்ப சுருட்டுக்கு நெருப்பு கேட்ட மாதிரி எடப்பாடி கூட்டணி கணக்கை எல்லாம் பேசி வருகிறார்.

* ஆடு நனையுது என்று ஓநாய் அழுவது போல் தவெகவிற்காக எடப்பாடி, வக்கீலை போல் வாதம் இட்டு இருக்கிறார்.

* பழனிசாமி ஊர் ஊரா போய் கூவுவதை பார்த்தால் அவரை கூட்டணிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்.