கரூரிலிருந்து வேகமாக தப்பியது ஏன்? உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதாலே விஜய் சென்றார்: முட்டு கொடுக்கும் நயினார்
நெல்லை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறப்பதை கவனித்தேன். அது தொண்டர்களாக ஒன்று சேரும் ஒரு விஷயம். . விஜய் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்தால், பொதுமக்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும். விஜய் கரூர் மக்களை சந்திக்க அஞ்சுகிறார். ஏன் அவர் இவ்வளவு நாள் போய் பார்க்கவில்லை என்று விமர்சனம் செய்கிறார்கள்.
விஜய் சென்றிருந்தால் அவரது உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பார்கள்? 41 பேர் இறந்தனர். அதேபோல அவரையும் யாராவது ஏதாவது செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் விஜய் கரூரில் இருந்து சென்றுவிட்டார். விஜய் விஷயத்தில், அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நான் பகிரங்கமாகவே சொல்கிறேன். கரூர் சம்பவத்தைப் பயன்படுத்தி விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ஒன்றும் இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரிய கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ஜே.பி.நட்டா வருகை திடீர் ரத்து: நயினார் பிரசாரம் ஒத்திவைப்பு?
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மதுரையில் நாளை மறுதினம் (அக். 12) தொடங்கும் முதல்கட்ட பிரசாரம் பல்வேறு மாவட்டங்கள் வழியாக நவ. 17ம் தேதி நெல்லையில் நிறைவு பெறுகிறது. மதுரையில் துவங்கும் பிரசாரத்தை பாஜ தேசியத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஜே.பி.நட்டா தொடங்கி வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரை அண்ணா நகரில் நடக்கும் பிரசார பயண துவக்க விழாவிற்கு மதுரை மாநகர் போலீசார் அனுமதி அளித்தனர். இந்நிலையில், ஜே.பி.நட்டாவின் மதுரை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணமும் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு பிரசார பயணம் தொடங்கும். புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். திட்டமிட்டவாறு ஜே.பி.நட்டா மதுரை வந்து பிரசாரத்தை தொடங்கி வைப்பார் என பாஜ கட்சியினர் தெரிவித்தனர்.