கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு தவெக அலுவலக உதவியாளர், வழக்கறிஞரிடம் சிபிஐ விசாரணை: விஜய்யின் பிரசார பஸ் சிசிடிவி பதிவுகள், ஆவணங்கள் ஒப்படைப்பு
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக அலுவலக உதவியாளர், வழக்கறிஞர் ஆகியோர் நேற்று சிபிஐ அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41பேர் பலியான வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கரூர் பயணியர் மாளிகையில் தங்கியபடி ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் 12 அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைக்காரர்கள், பெட்ரோல் பங்க், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஊழியர்கள், மருந்துக்கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடமும் சிபிஐ விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து, சம்பவ இடத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த 2 நாட்களாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் ரத்த வங்கி நடத்தி வரும் சரவணன் என்பவரிடம் தொடர்ந்து நேற்று 3வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடுத்த கட்டமாக சென்னை தவெக கட்சி அலுவலக உதவியாளர் குரு, தவெக வழக்கறிஞர் அரசு மற்றும் கட்சி நிர்வாகி ஒருவர் என 3 பேர் நேற்று கரூர் சிபிஐ விசாரணை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் தொடர்பான முக்கிய ஆவணங்களையும், விஜய்யின் பிரசார பஸ்சின் சிசிடிவி காட்சிகளையும் மேலும் சில சிசிடிவி காட்சி பதிவுகளையும் சிபிஐ அலுவலகத்தில் சமர்ப்பித்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

