கரூர் கூட்ட நெரிசலுக்கு விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே காரணம்: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: கரூர் கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு காலை முதல் குடிநீர், உணவு வழங்கப்படவில்லை, இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்ததுடன், 41 பேர் இறப்புக்கும் காரணமாகிவிட்டது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது:
கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது. நம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கியது. இறந்து போனவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியை நான் செலுத்துகிறேன். உறவுகளை இழந்தவர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 26.9.2025 அன்று, அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமிபுரத்தில் 27.9.2025 அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறை சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையை பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சி தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர். 27.9.2025 அன்று, அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து, காலை 8.40 மணிக்கு புறப்பட்டு, 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார்.
அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணியை கடந்து, 7 மணி நேரம் கழித்துத்தான் வந்தார். இந்த காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர் வழங்கவில்லை; உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரசார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், பிரசார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்க்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தினர். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என்று பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறி சென்றனர்.
வழிமுறைகளை மீறி, வாகனம் அக்க்ஷயா மருத்துவமனையில் இருந்து, 30-35 மீட்டர் தூரம் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை இது நிலைகுலையச் செய்தது. இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்தில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பீதி, மூச்சுத் திணறல், மயக்கம் மற்றும் நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கிறார்கள். கூட்டத்தின் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து, தகரக் கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள்.
இதனால் மின்சாரம் தாக்குவதை தடுக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை.
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தவெக கட்சியினர், இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கி, ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் மீட்புப் பணிகள் தடைபட்டன. இது தொடர்பாக, கரூர் நகர காவல் நிலையத்தில், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித்துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார். மற்றொரு குற்றவாளி, இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். கரூரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரை கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனேயே தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மை செயலர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டார்கள்.
மேலும், அன்றிரவே நானும் கரூருக்கு சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கரூர் துயரத்தைக் கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அதனால்தான் உடனடியாக கரூருக்கு அன்றைய இரவே சென்றேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நேரில் பார்வையிட்டு, மருத்துவர்களுடன் ஆலோசித்து உத்தரவுகள் பிறப்பித்தேன். அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள்.
துயரமான இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. தீவிர காயமடைந்த 47 பேருக்கு தலா ரூ.1 லட்சம், வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்ற 55 பேருக்கு தலா ரூ.50,000 என மொத்தம் 143 பேருக்கு ரூ.4.84 கோடி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரிக்க, 28.9.2025 அன்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 3.10.2025 அன்று ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்காக ஒப்படைக்கப்பட இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அரசின் உயர் அலுவலர்கள், காவல் துறை உயர் அலுவலர்கள் செய்தியாளர்களை சந்தித்து உண்மையை நிலையை வீடியோக்களுடன் ஆதாரத்தோடு தெளிவுபடுத்தினார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது நமது அரசு. அனைவருக்கும் உரிய சிகிச்சை அளித்தது நமது அரசு. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்பதை நான் இங்கே உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் இதுபோன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும்விட மக்களின் உயிரே முக்கியம், மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* அதிமுக பரப்புரை கூட்டத்துக்கு நேர் மாறாக த.வெ.க. கூட்டம்
சம்பவம் நடந்த அதே வேலுச்சாமிபுரத்தில் இதற்கு இரு தினங்களுக்கு முன்பாக, அதாவது 25.9.2025 அன்று எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி பழனிசாமி) கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர்.
எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அக்கூட்டம் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அந்த பரப்புரை கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்களும், 30 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்த கட்சியின் நிகழ்ச்சி நடந்துள்ளது என்று முதல்வர் கூறினார்.
* உடனடியாக உடற்கூராய்வு ஏன்?
உடனடியாக, உடற்கூராய்வு நடைமுறையை முடித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டி கரூர் அரசு மருத்துவ கல்லூரி தடயவியல் துறை தலைவர் சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவி பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 28.9.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு, முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டு, அன்று மதியம் 4 மணியளவில் 39வது உடற்கூராய்வு முடிவுற்றது என்று முதல்வர் கூறினர்.
* இறந்தவர்கள் நமது உறவுகள்
கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான், நமது தமிழ்நாடு மக்கள்தான். சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வதந்திகள் பரவியபோது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ மூலமாக எந்த அரசியல் கட்சி தலைவரும் தன் கட்சி தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்பமாட்டார்கள் என்றுதான் நான் குறிப்பிட்டேன். இறந்தவர்கள் நமது உறவுகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.