சென்னை: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜ. பாஜ இந்த பிரச்னையை திசை திருப்ப, மடைமாற்றம் செய்ய முயற்சிக்கிறது. எனவே காங்கிரஸ் மூ்த தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த எம்பிக்கள் கொண்ட குழு ஒன்றை நியமனம் செய்து கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உண்மை கண்டறியும் குழுவை நியமிக்க வேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன். பாஜ செய்யக்கூடிய சதி முறியடிக்க வேண்டுமென்றால், காங்கிரஸ் தலையிட வேண்டும். இது பெரும் துயரம், கொடும் துயரம். யாராலும் சகித்துக் கொள்ள முடியாத துயரம். ஆனால், இதை வைத்து அரசியல் செய்ய நினைப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் துரோகம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனி இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். இதற்கு எந்தக் காரணங்களைச் சொன்னாலும் தவெக தலைவர் விஜய் தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.