கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யின் பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை
* பிரசார வாகன சிசிடிவி பதிவுகளை ஒப்படைக்க வேண்டும்
* கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது பிடி இறுகுகிறது
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் தவெக தலைமை அலுவலகத்தில் நேற்று சிபிஐ அதிகாரி விசாரணை நடத்தினார். அப்போது கூட்ட நெரிசலின் போது நடிகர் விஜய் பயன்படுத்திய பிரசார வாகனத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஓரிரு நாளில் ஒப்படைக்க வேண்டும் என்று சம்மன் வழங்கப்பட்டது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து 6 மணி நேரம் காலதாமதமாக நடிகர் விஜய் பிரசார கூட்டத்திற்கு வந்ததால், ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் அளித்த புகாரின்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டனர். கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் சில உத்தரவுகள் பிறப்பித்து சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதைதொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குஜராத் மாநிலத்தை சேர்ந்த எஸ்பி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த 17ம் தேதி முதல் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணையை தொடங்கி, விபத்து நடந்த வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று 3 டி டிஜிட்டல் சர்வே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கூட்டம் நடந்த சாலையின் அகலம், நீளம் என 700 மீட்டர் அளவுக்கு கணக்கிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நெரிசலில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் என மொத்தம் 306 பேருக்கு சம்மன் அனுப்பினர். சிபிஐ சம்மனை தொடர்ந்து 15 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் துருவி துருவி கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர்கள் அளித்த பதிலை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் பிரசார கூட்டத்தின் போது நடிகர் விஜய் வந்த பேருந்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. கூட்டத்தில் ஏன் நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நெரிசலில் பேருந்து சென்றதால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தும் வகையில், விஜய் பயன்படுத்திய பேருந்தில் உள்ள சிசிடிவி பதிவுகள், பேருந்தின் அகலம், நீளம் குறித்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னை பனையூரில் நடிகர் விஜய் கட்சியின் தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று சிபிஐ அதிகாரி ஒருவர் வந்தார்.
அப்போது கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடிகர் விஜய் குறித்து சிபிஐ அதிகாரி கேட்டறிந்தார். பிறகு தலைமை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் சிறிது நேரம் பார்வையிட்டார். பின்னர் நடிகர் விஜய் கூட்ட நெரிசலின் போது பயன்படுத்திய பேருந்து குறித்து முழுமையான தகவல்கள் மற்றும் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அனைத்தும் விசாரணை அதிகாரியிடம் ஓரிரு நாளில் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக சம்மனை கட்சி நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரி வழங்கினார்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த விசாரணையின் முடிவில் சிபிஐ அதிகாரி காரில் புறப்பட்டு சென்றார். விசாரணையின்போது சிபிஐ அதிகாரியுடன் கானத்தூர் போலீசார் உடனிருந்தனர். சிபிஐ அதிகாரிகள் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் விபத்து தொடர்பாக தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தவெக பிரசார பொறுப்பாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு இறுதியாக தவெக தலைவர் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. சிபிஐ அதிகாரிகள் தவெக தலைமை அலுவலகத்தில் திடீரென விசாரணை நடத்திய சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* 3 நாளில் ஒப்படைப்போம்
சிபிஐ விசாரணை குறித்து தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, ‘சிபிஐ அதிகாரிகள் எங்களிடம் ஒரு சம்மன் கொடுத்துள்ளனர். அந்த சம்மனில் சில விவரங்கள் கேட்டுள்ளனர். அதாவது பிரசார வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் மற்றும் சில விவரங்கள் கேட்டுள்ளனர். அந்த விவரங்களை 3 நாட்களுக்குள் தருவதாக நாங்கள் சிபிஐ அதிகாரியிடம் கூறியுள்ளோம்’ என்றார்.
 
 
 
   