கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரிக்க வடமாநில ஏடிஜிபிக்கள் 2 பேர் நியமனம்: சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடுவார்கள்
சென்னை: கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணையை கண்காணிக்க வடமாநிலத்தைச் சேர்ந்த 2 ஏடிஜிபிக்களை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய், தவெக கட்சியைத் தொடங்கி மண்டல மாநாடுகளை நடத்தினார். இந்த மாநாட்டுக்கு வந்த பல ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். பலர் தண்ணீர், சாப்பாடு இல்லாமல் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். ஆனால் மாநாடுகளில் மொத்தமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஒன்றிரண்டு பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில்தான் மக்கள் சந்திப்பை தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன்படி மாவட்டத்தில் ஒரு இடத்தில் பஸ்சில் சென்று பிரசாரம் செய்து வந்தார். அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி நாமக்கல், கரூர் சென்றார். நாமக்கல் பிரசாரத்தின்போதே கூட்டம் முண்டியடித்தது. அதில் பலர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து கரூர் வந்தபோது நடிகர் விஜயை பார்க்க கூட்டம் முண்டியடித்ததில் 41 பேர் உயிரிழந்தனர். 180 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டச் செயலாளர் ஆம்புலன்சை தடுத்ததாக கைது செய்யப்பட்டார். மேலும், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகி நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம், கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படையினர் உடனடியாக சம்பவம் இடம் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர் மதியழகனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதேநேரத்தில், தமிழக அரசு ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அவரும் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.இந்தநிலையில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெகவும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று பாஜகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் கண்காணிக்கவும், இதற்கு உதவ தமிழகத்தைச் சேராத 2 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில் தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமீத் சரண், சோனல் வி.மிஸ்ரா ஆகியோரை மேற்பார்வையிடும் அதிகாரிகளாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் ஏடிஜிபி சுமீத் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 1997ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். இவர், கோவை மாநகர கமிஷனராக பணியாற்றியுள்ளார். பின்னர் ஒன்றிய அரசு பணிக்குச் சென்றவர், தற்போது எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். அதேபோல, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சோனல் வி.மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 2000ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். இவர் தற்போது ஒன்றிய ரிசர்வ் போலீஸ்(சிஆர்பிஎப்) ஏடிஜிபியாக உள்ளார். இவர்கள் இருவரையும் மேற்பார்வையாளராக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேர்மையான அதிகாரிகளான இவர்கள் இருவரும் உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.