கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம்; சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
சென்னை: கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துமாறு சென்ைன உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிபிஐ விசாரணை கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வழக்கறிஞர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு கட்சித்தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்டநிர்வாகிகள் ஓடியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது. இவை விஜய், அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மீது தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதேபோல், நெரிசலில் சிக்கி பலியான சிறுவனின் தந்தை ஒருவரும் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மஹேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன், ரவீந்திரன் ஆஜராகினர். தவெக சார்பில் வழக்கறிஞர்கள் தாமா சேஷாத்ரி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூட்ட நெரிசலுக்கு காவல்துறையின் தோல்வியே காரணம் என்று வாதிட்டார். அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அனைவரின் வலிகளையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதேவேளையில், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற ஓரே காரணத்தின் அடிப்படையில் மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது.
ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவே இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐக்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் தேங்கிவிடும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான அறிக்கையை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும், மனுதாரர்களும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. நாளைய தீர்ப்பு பட்டியலில் கரூர் வழக்கு இடம்பெற்றுள்ளது.