கரூர்: கரூரில் கடந்த மாதம் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்ைக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 306 பேர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் விடுதியில் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் 10 பேர் ஆஜராகி அவர்களிடம் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் 2வது நாளாக நேற்று காலை 10 மணியளவில் 7 பேர், சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதில் அவர்கள் அளித்த வாக்குமூலங்களை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் 3 பேர் ஆவணங்களுடன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 க்கு சென்றனர். அப்போது நீதிபதியின் தனி அறையில் நீதிபதி பரத்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 10 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின்னர் அதிகாரிகள் 3 பேர் மீண்டும் பயணியர் விடுதிக்கு காரில் திரும்பினர். இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் கோரியும், எஸ்ஐடி சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்ப்பதற்காகவும் நீதிபதியை நேரில் சந்திக்க சிபிஐ அதிகாரிகள் வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 
   