கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து 34 மணி நேரத்துக்கு பிறகு வெளியே வந்தார் விஜய்
சென்னை: கரூர் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து 34 மணி நேரத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தார் விஜய். நீலாங்கரையில் இருந்து காரில் புறப்பட்ட அவர், பட்டினப்பாக்கம் இல்லத்துக்கு வந்தார். 11 மணி நேரம் அங்கு தங்கி நிர்வாகிகளுடனும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு வேண்டிய சிலருடனும் ஆலோசனை நடத்தி விட்டு இரவு 9.15 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த 13ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துவதாக அறிவித்தார். அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன், நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் செய்தார். கரூர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த பலரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்டத்திற்கு தாமதமாக வந்ததும், குடிநீர், சாப்பாடு வசதி ஏற்படுத்திக் கொடுக்காததும்தான் காரணம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அன்றயை தினம் நள்ளிரவே கரூர் மாவட்டத்திற்கு நேரில் சென்றார். அதிகாலையில், கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர்கள், கலெக்டர்கள், மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களையும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நிலைகளை கேட்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார்.
கூட்ட நெரிசலில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். இந்நிலையில், உயிரிழப்பு தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது கரூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கரூர் துயர சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். சம்பவம் நடந்த பகுதியான வேலுச்சாமிபுரத்தில் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆய்வு செய்தார். இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு எந்தவித ஆறுதலும் கூறாமல் இரவோடு இரவாக விமானம் மூலம் தவெக தலைவர் விஜய், சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் இரவு 11.47 மணிக்கு நீலாங்கரையில் உள்ள இல்லத்தை வந்தடைந்தார். அதற்கு பிறகு நேற்று காலை 10 மணிக்கு, அதாவது, 34 மணி நேரத்துக்கு பிறகு கார் மூலம் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது மற்றொரு வீட்டுக்கு சென்றார். காலை 7.30 முதல் 9 மணி வரை ராகுகாலம் என்பதால் காலை 10 மணிக்கு வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு புறப்பட்டார். பட்டினப்பாக்கம் இல்லத்தில் மன அமைதிக்காகவும் மற்றும் அடுத்தக்கட்ட நிலவரம் குறித்து நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தவும் சென்றதாக கூறப்பட்டது. அவரை முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் மட்டும் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் விஜய், மயிலாப்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு வேண்டிய ஒரு ஆடிட்டரை சந்தித்து ரகசிய பேச்சுவார்த்ைத நடத்தியதாக தெரிகிறது. ஆனால் சிலரோ அவர் சந்திக்கவில்லை. அவரது சார்பில் சிலர் சென்று ஆடிட்டரை சந்தித்தனர் என்று தெரிவிக்கின்றனர். நேற்று காலை முதல் இரவு வரை அவரது பயணமும், சந்திப்பும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.