கரூர் பிரசாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை: சென்னை ஐகோர்ட் நீதிபதி கடும் கண்டனம்
* தொண்டர்கள், மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஓடிவிட்டார்
* என்ன மாதிரியான கட்சி இது?
* பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டும்
* நீதிமன்றம் கண்ணை மூடி வேடிக்கை பார்க்காது
* சென்னை ஐகோர்ட் நீதிபதி கடும் கண்டனம்
* ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவு
சென்னை: கரூர் பிரசாரத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பே இல்லை என்றும், தொண்டர்கள், மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து ஓடிவிட்டார் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் அதிரடி உத்தரவு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்தவுடன் நடிகர் விஜய் மட்டுமல்லாது அவரது கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பல நிர்வாகிகளும் கரூரில் இருந்து ஓட்டம் பிடித்தனர். கரூர் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவர் கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை. நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் உறவினர்களை சந்திக்கவில்லை. காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை.
மேலும், இரு நாட்கள் கழித்து வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காமல் தனது கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், ரோடு ஷோ நடத்த வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்ட பின்னரும், ஆதவ் அர்ஜுனா விடாப்பிடியாக கரூர் வேலுச்சாமிபுரத்துக்கு சென்றே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது வற்புறுத்தலால் தான் விஜய் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அதில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் பேரணி செல்ல அனுமதி வழங்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்துள்ளோம்’’ என்றார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கோரியுள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது என, காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதி செந்தில்குமார், இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். பின்னர், வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்தையும் அனுமதித்துள்ளீர்கள் என அரசின் மீது அதிருப்தி தெரிவித்தார். காவல்துறை கண்மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைத்துக் கட்சியினரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் விஜய் கட்சியின் நிர்வாகிகள் மட்டும் ஓட்டம் பிடித்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பேருந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா?. வழக்குப்பதிய என்ன தடை? காவல் துறை தனது கைகளை கழுவி விட்டதா? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்?. வழக்குப்பதிவு செய்து, பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்களை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது” என்றார்.
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ‘‘தவெக கேட்ட இடத்தை தான் ஒதுக்கினோம். 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன. மீதமுள்ள 9 நிபந்தனைகள் மீறப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் பிரசாரம் செய்துள்ளார். தவெக நிகழ்ச்சிக்கு 559 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர். அரசு மீது குறை கூறுவது எளிது. டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி திடீரென செப்டம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது\” என்றார்.
இதைக்கேட்ட நீதிபதி செந்தில்குமார், ‘‘கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இருக்க முடியாது. பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை. கட்சியின் தலைவரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஓட்டம் பிடித்துள்ளனர். என்ன மாதிரியான கட்சி இது? 41 பேர் மறைவுக்கு வருத்தம் கூட கட்சி தெரிவிக்கவில்லை.
இது அக்கட்சி தலைவரின் மனநிலையை காட்டுகிறது. அரசியல் கட்சிக்கான குறைந்தபட்ச சமூக ெபாறுப்பைக் கூட த.வெ.க. பின்பற்றவில்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை. சம்பவம் நடந்த இந்த வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்பி, கூடுதல் எஸ்பி அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு வசம் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
* கரூர் சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு
* விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?
* 41 பேர் மறைவுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
* கட்சித் தலைவரின் மனநிலையைத் தான் இது காட்டுகிறது
சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கண்டனம்
* விஜய்க்கு தலைமை பண்பு இல்லை.
* ஏன் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை?
* என்ன மாதிரியான கட்சி இது?.
* கரூர் சம்பவம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்
* தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல.
* விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?
* ஏன் இந்த தாமதம்?
* ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் இது நடந்துள்ளது.
* நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா?
* தொண்டர்கள், பின் தொடர்பவர்களை கைவிட்டு தலைவர் முதல் அனைவரும் மறைந்து விட்டனர்.
* தவெகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புக்கூட இல்லை.
* நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது.
* சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்.
* ஆதவ் அர்ஜூனா சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?
* நீதிமன்றம் மவுன சாட்சியாக இருக்க முடியாது
* கரூர் வீடியோக்களை உலகமே பார்த்திருக்கிறது.