Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்டநெரிசல் விபத்து குறித்து வதந்திகளை பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு: பாஜ, தவெக நிர்வாகிகள் 3 பேர் அதிரடி கைது

சென்னை: கரூர் நெரிசல் விபத்து குறித்து சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய 25 பேர் மீது சென்னை பெருநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி சகாயம், தவெக நிர்வாகி சிவநேசன், சரத்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவதூறு பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், இளம்பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கரூர் நகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சமூக வலைத்தளங்களில் சிலர் திட்டமிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகள் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்டு வரும் புகாரின் மீது சென்னை பெருநகர காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி கரூர் நெரிசல் தொடர்பாக வதந்தி பரப்பியதாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் சென்னை பெரும்பாக்கம் பாஜ மாநில கலை பிரிவு செயலாளர் சகாயம் (38), தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மாங்காடு தவெக உறுப்பினர் சிவநேசன் (36), மற்றும் ஆவடி த,வெ.க. வட்ட செயலாளர் சரத்குமார் (32) நேற்று கைது செய்தனர். ேமலும் பலரை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைத்தளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது. இவ்வாறு, பொது வெளியில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.