சென்னை: கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது சரியானதுதான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது கூட்டநெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு காரணம் என்ன? என்பது பற்றி ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல்செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, மக்களை சந்திக்க விஜய் தாமதம் செய்திருக்க கூடாது. கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணம் என ஏன் ' பழிபோடுகிறீர்கள். ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சரியானதல்ல. கூட்டம் இருந்தால் ஆம்புலன்ஸ் வருவது வழக்கம்தான். காவல்துறை விதித்த 15 நிபந்தனைகளில் எதையும் கடைபிடிக்கவில்லை. விஜய் திறந்த வெளியில் வந்திருந்தால் பிரச்சனை குறைந்திருக்கும். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு கவனமுடன் பேச வேண்டும்; மக்கள் பாதுகாப்பு அவசியத்தை உணர வேண்டும். கரூர் துயர சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைத்தது சரியானதுதான். என தெரிவித்தார்.