Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் துயரம் காரணம் என்ன?.. முதற்கட்ட பரப்புரையில் இருந்தே நிபந்தனைகளை அலட்சியப்படுத்தும் விஜய்!!

செப்.13 முதற்கட்ட பிரச்சாரம்:

த.வெ.க. தலைவர் விஜய், இதுவரை மாநாடுகள் மூலம் மட்டுமே தொண்டர்களை சந்தித்து வந்த நிலையில், திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை பயணத்தை தொடங்கினார். செப்டம்பர் 13ம் தேதி காலை 10.35 மணிக்கு விஜய், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து அங்கு செல்ல விஜய்க்கு 4 மணி நேரம் தாமதமானது. அந்த அளவுக்கு விஜயின் பிரச்சாரம் வாகனம் முன்பு அவரது தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்தார்.

அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் விஜய் பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 6 மணிநேர தாமதத்திற்கு பிறகு திருச்சியில் இருந்து அரியலூர் சென்று பரப்புரை மேற்கொண்டார். ஏற்கனவே மாலை 4.30 மணிக்கு பெரம்பலூர் குன்னம் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 5 மணிக்கு வானொலி திடலிலும் விஜய் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அறியலூரிலேயே இரவு 8.30 மணி ஆனதால் விஜய் பெரம்பலூர் செல்வதற்கு 12.30 மணி ஆனது. இதனால் பெரம்பலூரின் குன்னம் பகுதிக்கும் வந்த விஜய் மக்களை பார்த்து கையை மட்டும் அசைத்து விட்டு எதுவும் பேசாமல் சென்றார். பின்னர் வானொலி திடலுக்கு செல்லாமல் விஜய், சென்னைக்கு திரும்பினார்.

செப்.20 இரண்டாம் கட்ட பிரச்சாரம்:

செப்.20ம் தேதி இரண்டாம் கட்ட பரப்புரையில் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் அண்ணா சிலை அருகே நண்பகல் 12.30 மணிக்கு பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியது. ஆனால் திருச்சி விமான நிலையத்திற்கு 9.15 மணிக்கு வந்த விஜய், அங்கிருந்து நாகைக்கு காரில் புறப்பட்டார். நாகையில் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதித்த நேரத்தை தாண்டி பிற்பகல் 1.30 மணிக்கு தான் விஜயின் பிரச்சார வாகனம் வந்தது. பின்னர் திருவாரூர் தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணியளவில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 3 மணிநேர தாமதத்திற்கு பிறகு மாலை 6 மணியளவில் திருவாரூர் சென்று விஜய் பரப்புரை மேற்கொண்டார்.

செப்.27 மூன்றாம் கட்ட பிரச்சாரம்:

இதேபோன்று தான் நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் விஜயின் பிரச்சார வாகனம் செல்வதற்கு தாமதமாகியுள்ளது. செப்.27ம் தேதி காலை 8.45 மணிக்கு நாமக்கலிலும், மதியம் 12.45 மணிக்கு கரூர் வேலுசாமி புரத்திலும் விஜய் பேசுவார் என தவெக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 6 மணிநேர தாமதத்திற்கு பிறகு நாமக்கல் சென்ற விஜய், அங்கிருந்து 9 மணிநேர தாமதத்திற்கு பிறகுதான் கரூர் சென்றார். விஜய் பரப்புரைக்கு காலதாமதமாக வருவது ரசிகர்கள் அவர்கள் வாகனத்தை மறிப்பது, பின் தொடர்ந்து செல்வதால் ஏற்படும் கூடுதல் கால தாமதம் என காவல்துறையின் நிபந்தனைகள் தொடர்ந்து மீறப்பட்டு வந்துள்ளன. மேலும், தவெக சார்பில் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததும் கால தாமதம் உள்ளிட்ட விதிமீறல்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.