கரூர்: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த 41 பேரில், 10 பேரின் குடும்பத்தினர் நேற்று காலை 10 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் ஆஜராகினர். பிற்பகல் 2 மணி வரை தனித்தனியாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர்.
உயிரிழந்தவர் என்ன உறவு, என்ன வேலை பார்த்து வந்தார், மாணவர் என்றால் என்ன படித்துக்கொண்டிருந்தார், உயிரிழந்தவர் தவெக கட்சி உறுப்பினரா? அல்லது விஜய் ரசிகரா?, அவர்களை யாராவது கூட்டத்திற்கு அழைத்து சென்றார்களா?, உயிரிழந்தது எப்போது தெரியும்? யார் தகவல் சொன்னார்கள்?, யார் யார் நிவாரண தொகை வழங்கினார்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். மாலை 5 மணியளவில் மத்திய மின் அமைச்சகத்தை சேர்ந்த பவர் கிரிட் அதிகாரிகள் 2பேர் ஆஜராகினர். அவர்களிடம் அரைமணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பவர் கிரிட் அதிகாரிகள், கூடுதல் ஆவணங்கள் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

