கரூர் நெரிசலில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று கூறி தவெகவினர் தட்டிக்கழிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
மதுரை : கரூர் நெரிசலில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று கூறி தவெகவினர் தட்டிக்கழிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் டவுன் போலீசார், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன், இவருக்கு அடைக்கலம் தந்த கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் 29ம்தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் கரூர் ஆறுமுக பாளையத்தைச் சேர்ந்த தவெக கரூர் மத்திய நகரச் செயலாளர் பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஜாமின் கோரி வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் கூட மனுதாரர் இல்லை எனவே ஜாமின் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, "இந்த சம்பவத்தை பொறுத்தவரை, பொறுப்பு இல்லை என தட்டிக் கழிக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்பு உள்ளது" என குறிப்பிட்டு, வழக்கில் ஏன் சிபிஐ எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், "சிபிஐ-யை எதிர்மனுதாரராக சேர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.