Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு விஜயின் தாமதம்தான் முக்கிய காரணம்: உண்மை கண்டறியும் குழு அறிக்கை

சென்னை: கரூர் துயர சம்பவத்துக்கு யாருடைய சதியும் உள்நோக்கமோ இல்லை என்று உண்மை கண்டறியும் குழு தகவல் தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் கரூர் துயரம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தொழிலாளர்கள், காவல்துறை, வழக்கறிஞர்களை சந்தித்து உண்மைகளை திரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் சரசுவதி தலைமையிலான குழு உண்மைத் தகவல்களை திரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் 13 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அக்.9, 10ல் ஆய்வு நடத்தியது. குழு ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி, உறுப்பினர்கள் ஜாக்லின், எப்.மேரி லில்லிபாய், வழக்கறிஞர் சுதா காந்தி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.

கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். கரூர் பரப்புரையின் போது த.வெ.க. சார்பில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. 27ம் தேதி சனிக்கிழமை என்பதால் அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது.

காலை 8.45க்கு நாமக்கல்லில் பரப்புரையை தொடங்க வேண்டிய விஜய், சென்னையில் இருந்தே 8.45க்குதான் புறப்பட்டுள்ளார். விஜயின் தாமதம்தான் அடுத்தடுத்த தாமதத்துக்கு தொடக்கமாக இருந்துள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கால தாமதமாகவே விஜய் பரப்புரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கால தாமதமாக கூட்டத்தை தொடங்கியதும் நெரிசலுக்கும்,உயிரிழப்புக்கு காரணமாகும்.

மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்களாக த.வெ.க. பொறுப்பாளர்கள் இருந்துள்ளனர். சென்னையில் ஏற்பட்ட கால தாமதத்துக்கான காரணம் பற்றி விஜய் இதுவரை விளக்கவில்லை. கரூர் வந்ததும் பெரிய காலதாமதம் என்கின்றபோது, மக்கள் மன்றத்தில் விஜய் விளக்க வேண்டும். கூட்டம் காட்டும் எண்ணத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் வரும் வழிகளில் விஜய் வாகனம் மெதுவாக இயக்கச் செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

40 நிமிடங்களில் கடக்கக் கூடிய நாமக்கல் - கரூர் புறவழிச் சாலையை

பல மணி நேரம் கடந்து பயணித்து வந்துள்ளார் விஜய். விஜய் பேச இருந்த இடத்துக்கு 50 மீட்டருக்கு முன்னரே காவல்துறை கூறியபடி, வாகனத்தை நிறுத்தி பேசியிருந்தால் நெரிசலை குறித்து இருக்கலாம். விஜயுடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் கூட்ட நெரிசல் என்று எச்சரித்தும் அதை அலட்சியப்படுத்தி தன் பேச்சை தொடர்ந்தார். விஜயின் செயல் மக்கள் மீது அவருக்கு இருந்த அக்கறை, பொறுப்பின்மையை காட்டுகிறது

விஜய் கூட்டம் நடக்கும் இடங்கள், அவர் விமான நிலையம் வரும் போது 2,000 பேர் பின்தொடர்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. விஜய் வாகனத்தை பின்தொடரும் 2,000 பேர் கொண்ட குழு யார், இவர்கள் த.வெ.க.வினால் ஏற்பாடு செய்யப்பட்டவர்களா என விசாரணை செய்து வருகின்றனர். விஜய் வாகனம் கூட்டத்துக்குள் வந்த பின் 20 பேர் கொண்ட குழு கூட்டத்தை கயிறு கொண்டு உள்நோக்கி தள்ளியதாக கூறப்படுகிறது. கயிறு கட்டி கூட்டத்தை உள்நோக்கி தள்ளியது யார் என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும்.

செப்.25, 26ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. துண்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. 27ம் தேதி அன்றும் காலையில் இருந்தே விஜய் எனும் நடிகரை பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் இருந்திருக்கிறார்கள். செப்.27ம் தேதி மதிய நேரங்களில் மேளம், ஆட்டம், பாட்டம் என மக்கள் கூட்டம் மாலை வரை கூடியிருந்தது. குழந்தைகள் பாதுகாப்பு கருதி பெண்கள், விஜய் வாகனத்தின்

வலதுபுறம் இடம்பிடித்து நின்றுள்ளார்கள்.

விஜய் வாகனம் நின்ற இடத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் இருந்த இடத்துக்கு நகரவே கட்டுக்கடங்கா நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர், விஜய் வாகனத்தின் வலதுபுறத்தில் இருந்தவர்கள். பெண்கள், குழந்தைகள் பெருமளவில் இறந்ததற்கு இதுவும் ஒரு காரணம். கூட்டம் நசுங்கி, நொறுங்கியது என்று சொன்னால் மிகையன்று. அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தும் போது அக்கட்சியின் பொறுப்பாளர் அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொள்வார்.

கரூர் பரப்புரையின் போது த.வெ.க. சார்பில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. த.வெ.க. சார்பில் கூட்ட எண்ணிக்கையை கணிக்க முடியாததும் நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கம் சார்பில் கரூர் துயரம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது