அறிவியல் யுகத்திலும் கூட பெண் குழந்தை வேண்டாம் என நிராகரிக்கும் பழக்கம் இன்னும் பல கிராமங்களில் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதனால் பெண்களின் பிறப்பு விகிதத்தில் இருந்தே பிரச்சனைதான். போதாக்குறைக்கு பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், வன்கொடுமை, குடும்ப வன்முறை, இது இல்லாமல் குழந்தைப் பேறு, மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்னைகளை சந்தித்து அல்லது தப்பிப் பிழைத்து தான் அவர்கள் வாழ்க்கையை வாழ வேண்டும். இவை எல்லாம் போதாதென அதிகம் நாம் பேசாத, விவாதிக்காத இன்னொரு பிரச்னை மருத்துவ சிகிச்சை வடிவில் வந்து நிற்கிறது.மறைமுக சுகாதாரக் கொடுமை பெண்களின் உடலுக்குள் நடந்து கொண்டிருக்கிறது. கருப்பை நீக்கம் (Hysterectomy) . அதுவும் தேவையற்ற கருப்பை அகற்றல்கள் ( Medically Unnecessary) . தேவை இல்லாமல், குறிப்பாக குறைந்த வயதிலேயே பெண்களின் கருப்பை அகற்றப்படும் சம்பவங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண்களின் உடல் , மன நல பிரச்னைகள், இனப்பெருக்கத் தடைகள் , ஹார்மோன் பிரச்னைகள், என பலவிதமான பிரச்னைகளை பெண்கள் சந்திக்கின்றனர்.
இந்தியாவின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் (NFHS-5, 2019-2021) வெளியாகியுள்ள தகவல்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 3.2% பேர் கருப்பை அகற்றியுள்ளதாக பதிவாகியுள்ளது. சில மாநிலங்களில் இந்த எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. உதாரணமாக, ஆந்திரப் பிரதேசத்தில் இந்த சதவிகிதம் 8.1% ஆகவும், தெலுங்கானாவில் 7% ஆகவும் உள்ளது. பீஹார், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் இதன் விகிதம் அதிகமாகவே உள்ளது.இதன் பின்னணியில் பெரும்பாலும் கிராமப்புற மருத்துவமனைகள் தான் இருக்கின்றன. மாதவிடாய் கோளாறுகள், வயிற்று வலி, சிறுநீரக பாதிப்புகள், ஹார்மோன் பிரச்னைகள், ஏன் நீரிழிவு நோய் பிரச்னைக்கு கூட தகுந்த பரிசோதனை இல்லாமல் கருப்பை நீக்கப்படுகிறது. அதாவது5 இல் 1 பெண் தேவையற்ற கருப்பை நீக்கம் சிகிச்சைக்கு ஆளாகிறார்.உண்மையில் யாருக்கு கருப்பை நீக்கம் தேவை, எந்த மருத்துவ பிரச்னைகளுக்கு கருப்பை அகற்றப்படுகிறது, இதன் பின்னணியில் இருக்கும் மருத்துவ வணிகம் என்ன? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் வினுதா அருணாச்சலம் ( Gynecologist, Obstetrician, MBBS, MD - Obstetrics & Gynaecology )
லேப்ராஸ்கோபிக் சிகிச்சை, ரோபோடிக்ஸ் சிகிச்சை, உட்பட இன்று எத்தனையோ நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதனால் முதலில் உடலில் இருக்கும் பிரச்னை என்ன என தெரிந்து கொள்ள வேண்டும். ஏராளமான வசதிகள் இருக்கும் பட்சத்தில் நேரடியாக ஒரே மருத்துவர், அவரிடம் ஆலோசனை அவர் சொல்வதை வேதவாக்காக கேட்டுக்கொண்டு நடப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். இரண்டாம் பரிந்துரை நிச்சயம் மருத்துவ விஷயத்தில் அவசியம். ஒரு மருத்துவர் உங்கள் உடல் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்ன சொல்லிவிட்டால் அதை கண்மூடித்தனமாக நம்பாமல் தொடர்ந்து இரண்டு ஒரு மருத்துவமனைகள் இன்னும் சில மருத்துவர்களின் ஆலோசனை பெற்று இறுதியாக அறுவை சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். அதில் இந்த கருப்பை நீக்கம் என்பது உடலில் ஒரு உறுப்பை வெளியே எடுப்பது. இதில் இருக்கும் பின்னணி பிரச்னைகள் குறித்து யோசிக்காமல் அந்த நிமிடத்தில் தீர்வு கிடைத்தால் போதும் என்கிற மனநிலையில் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் இதில் சில பக்க விளைவுகள் இருக்கின்றன. ஒரு பெண் தன்னுடைய கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை செய்த பிறகு உடலளவிலும் மனதளவிலும் நிறைய பிரச்னைகளை சந்திப்பார். உதாரணத்திற்கு கருப்பை நீக்கும் பொழுதே ஈஸ்ட்ரோஜன் சுரப்பியும் சேர்ந்து நீக்கப்படும். இதனால் மனநிலை மாற்றம் துவங்கி கால்சியம் குறைபாடு, எலும்பு தேய்மானம், இதய பிரச்னைகள் வரையிலும் கூட உருவாக வாய்ப்புகள் அதிகம். மேலும் இளம் வயதில் கருப்பை நீக்கம் இனவிருத்திக்கு தடையாக மாறும்.ஆனால் இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்னை, உணர்வு குறைதல் போன்ற பிரச்னைகள் இல்லை. ஏனெனில் கருப்பையே இல்லாமல் பிறந்த நபர்கள் கூட, திருமணம் செய்து சந்தோஷமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். குழந்தைப் பேறு சாத்தியம் இல்லை, ஆனால் குழந்தையை தத்தெடுத்து வாழ்கிற தம்பதிகள் ஏராளம். எந்த பிரச்னைகளுக்கு கருப்பை நீக்கம் அறுவை சிகிச்சை வரை செல்ல வேண்டும்? தொடர்ந்தார் டாக்டர் வினு அருணாச்சலம்.
‘‘மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் வருவது சாதாரணம். ஆனால் ஒரு சில பெண்களுக்கு பத்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட்டு , இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். அவர்களை சரியாக சோதனை செய்து இறுதியில் முடியாத பட்சத்தில் தான் கருப்பை நீக்கும் பரிந்துரை செய்யப்படும். ஏனெனில் அதிக ரத்தப்போக்கு உயிருக்கே ஆபத்து. அதற்கு பதிலாக ஒரு உறுப்பை இழப்பது தவறில்லை. அடுத்து டியூமர் , கேன்சர் எனில் கருப்பை நீக்கம் பரிந்துரை செய்யப்படும். நீர்க்கட்டிகள், சிறிய கட்டிக் எல்லாம் இன்று நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு அல்லது மருந்துகள் மூலமே கரைக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் ஏராளம். அதுவும் இளம் வயது எனில் டியூமர் கட்டிகள் அல்லது கேன்சர் கட்டிகளை மட்டும் நீக்கிவிட்டு தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கலாம். 40 வயதுக்கு மேல் தான் கேன்சர் பிரச்சனைக்கு கருப்பை நீக்கப் படும். அதிலும் பெரும்பாலும் கருப்பை மட்டுமே நீக்கப்படும் கருமுட்டைகள் நீக்கப்படுவதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் தான் பெரும்பாலும் ஹார்மோன் பிரச்னைகளுக்கே சில நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத மருத்துவமனைகள் கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்கிறார்கள். இப்போது மிரனா காயில் ( Mirena Coil) அல்லது ஹார்மோன் காயில் ( Harmonal Coil) போன்ற நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்டன.
இந்த மிரனா காயில் அதித ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி ஹார்மோன் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும். குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு ஒரு சில பெண்களுக்கு நாள்பட்ட அதிகரத்தப்போக்கு ஏற்படும். இது தாயின் உயிருக்கு ஆபத்து என்பதாலேயே இந்த காயில் பரிந்துரை செய்வோம். இதை ஒரு சில வருடங்கள் கூட தொடர்ந்து கருப்பையில் வைத்து பயன்படுத்தலாம். இந்தக் காயில் குழந்தை பிறப்பையும் கட்டுப்படுத்தும். 99% இந்தக் காயில் மருத்துவ உலகில் வெற்றியை கொடுத்திருக்கிறது. ஒரு மருத்துவர் அறுவை சிகிச்சை என சொல்லிவிட்டாலே குடும்ப டாக்டர், தெரிந்த டாக்டர், தேர்ந்த நர்சிங் ஹோம் என ஆபத்துகளை விலைக்கு வாங்காமல் இன்னும் இரண்டு மருத்துவர்களிடம் சோதனை செய்து ( second openion) ஒருவர் அறுவை சிகிச்சை வேண்டாம் என சொன்னால் கூட அந்த மருத்துவரை பரிசீலனை செய்யலாம். ஏனெனில் கருப்பை நீக்கம் என்பது அந்த தருணத்தில் தீர்வு கொடுப்பதாக தோன்றினாலும் அடுத்து வரவிருக்கும் 20க்கும் மேற்பட்ட வருடங்களை வயிற்றில் ஒரு உறுப்பு இன்று கடக்கும் பொழுது நிறைய பக்க விளைவுகளை சந்திக்க கூடும். அதில் குறிப்பாக முதுகு தண்டுவட பாதிப்பு, எலும்பு தேய்மானம், கால்சியம் குறைபாடு, மனநிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வந்து சேரும். அதிலும் இன்று மருத்துவ உலகில் அதீத நவீன வசதிகளை பெற்றிருப்பது மகப்பேறு மருத்துவம் தான் என்கையில் அதில் ஏன் தயக்கம். இது குறித்து அரசு சார்ந்த மற்றும் தனியார் மருத்துவமனைகளும் போதிய விழிப்பு உணர்வுகளை கொடுக்க முகாம்களை நடத்த வேண்டும். நமக்கு என்ன மருத்துவம் செய்யப்படுகிறது என்ன சிகிச்சை பரிந்துரை செய்கிறார்கள் என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை”.
- ஷாலினி நியூட்டன்