கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1 கோடி டெபாசிட்டை விடுவித்த உச்ச நீதிமன்றம்: வட்டியுடன் திருப்பி தர உத்தரவு
புதுடெல்லி: வெளிநாட்டு பயணத்திற்கான நிபந்தனையாக கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.1 கோடி டெபாசிட் பணத்தை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதரம்பம், ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்த இரு வழக்குகளில் அவர் ஜாமீனில் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்காக நிபந்தனையாக உச்சநீதிமன்றம் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, கார்த்தி சிதம்பரம் ரூ.1 கோடியை டெபாசிட் செய்து 2023ல் வெளிநாட்டுக்கு சென்று விட்டு, தனது பாஸ்போர்ட்டை மீண்டும் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1 கோடி டெபாசிட் பணமும், அதற்கான வட்டித் தொகையையும் ஒரு வாரத்தில் அவரிடம் திருப்பித் தர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் பூயான், கோடீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.