Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் செங்கோட்டையன் மீண்டும் போஸ்டர்: ‘வெட்கமாக இல்லையா செங்ஸ்’ என அதிமுகவினர் விமர்சனம்

கோபி: தவெகவில் இணைந்த செங்கோட்டையன், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர்., ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர், ‘வெட்கமாக இல்லையா செங்ஸ்’ கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெகவில் கடந்த வாரம் இணைந்தார். உடனே அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கோபி அருகே கரட்டூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் விஜய் புகைப்படத்துடன் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களுடன் தனது முகநூல் பக்கத்தில் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அதில், அண்ணா, காமராஜர், வேலுநாச்சியார், பெரியார், அம்பேத்கார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், விஜய் மற்றும் செங்கோட்டையன் புகைப்படங்களுடன் வாழ்த்து செய்தியை வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவிற்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை கூறுவதற்கும், படங்களை பயன்படுத்துவதற்கும் உண்டான உரிமையை இழந்து விட்டீர்கள். அடிமைத்தனத்திற்கு அளவு இல்லையா. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் 50 பிளஸ் வயதே ஆன விஜய்யுடன் இணைந்து உள்ளீர்கள்.புஸ்சி ஆனந்த் படத்தை போட்டு எல்லாம் அரசியல் செய்ய வேண்டிய நிலை உருவாகி இருக்கு.

நம்ம அனுபவத்திற்கு இது தேவையா மூத்தவரே. வெட்கமாக இல்லையா செங்ஸ். 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. கழக துரோகி. அரசியல் வாழ்க்கையே அஸ்தமனம் தான். ஜெயலலிதா புகைப்படத்தை போட்டு ஆதாயம் தேடும் சுயநலக்காரர். புதிய கட்சியிலாவது விசுவாசமாக இருங்கள். உண்மையான அதிமுக தொண்டர்களுக்கு பெரும் துரோகி. எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் ஓட்டு கேட்க சென்றால் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்று பல்வேறு கமெண்ட்டுகளை பதிவிட்டு உள்ளனர். இதுதவிர தரக்குறைவான வார்த்தைகளாலும் இந்த பதிவிற்கு அதிமுகவினர் கமெண்ட் அளித்து உள்ளனர்.